பக்கம் எண் :

பக்கம் எண்:376

உரை
 
3. மகத காண்டம்
 
21. மகட்கொடை வலித்தது
 
           ஈரைம் பதின்மரை யிகல்கெட நூறி
     10    வீர மிக்க விறற்றறு கண்மைக்
           குருகுலத் தைவரு ளொருவன் போலத்
           தனிப்படச் செய்கை தன்கட் டாங்கிய
           மணிப்பூண் மார்பன் வத்தவ மன்னனொடு
           சுற்றத் தாரெனுஞ் சொல்லுடை வேந்தர்
     15    முற்றவ முடையரென் றுற்ற வுள்ளமொடு
           பகைகொண் மன்னரைப் பணித்ததற் கொண்டு
           தகைகொள் வேந்தன் றமரொடு சூழ்ந்து
           செங்கடை வேற்கண் வெள்வளைப் பணைத்தோட்
           டங்கையைப் புணர்க்குஞ் சிந்தைய னாகி
 
                      (தருசகன் கருதுதல்)
                 9 - 19 : ஈரைம்பதின்மர்.........ஆகி
 
(பொழிப்புரை) பெருந்தகைமையையுடைய தருசக மன்னன் தனக்குள் கருதுபவன், ஒரு நூற்றுவராகிய துரியோதனன் முதலியோரைத்  தான் ஒருவனே கொல்லவேண்டும் என்னும் கருத்துடையவனாகி அந்நூற்றுவரையும் போரின்கண் கெடுமாறு கொன்றொழித்து அதனால் வெற்றிப் புகழ் மிக்கவனும், வெற்றியையுடைய தறுகண்மையுடையவனும், குருகுலத்துத் தோன்றிய யுதிட்டிரன் முதலிய ஐவருள் வைத்து ஒருவனுமாகிய வீமசேனன் போல நம்பகைவராகிய விரிசகன் முதலிய பகையரசர் எண்மரையும் தானே தனி நின்று வெல்லல் வேண்டுமென்னும் கருத்துடையனாகி அப் போர்ச்செயலைத் தானே மேற்கொண்ட மணிகள் பதித்த அணிகலன்களையுடைய மார்பினையுடைய இவ்வத்தவ மன்னனோடு உறவுடையார் என்னும் புகழ்ச் சொல்லுடைய வேந்தர் முற்பிறப்புக்களிலே செய்த தவத்தையுடையோர் என்று பாராட்டுதலையுடைய நெஞ்சத்தோடு தன் பகைமன்னர் எண்மரையும் வென்று அடக்கியது காரணமாக அம்மன்னன் தன் அமைச்சர்களொடு நெடிது ஆராய்ந்து துணிந்து சிவந்த கடையினையுடைய வேல் போன்ற கண்களையும் சங்கவளையல்களையும் பருத்த தோள்களையும் உடையவளாகிய தன் தங்கை பதுமாபதி நங்கையை அவ்வுதயணமன்னனுக்குத் திருமணம் புணர்க்குங் கருத்தையுடையவனாகி ; என்க.
 
(விளக்கம்) ஈரைம்பதின்மர் - துரியோதனன் முதலிய நூற்றுவர். நூறி - கொன்று. ஐவர் - யுதிட்டிரன் முதலிய ஐவர். ஒருவன் - வீமசேனன்; இவன் ஒருவனே துரியோதனன் முதலிய நூற்றுவரையுங் கொன்றான். உதயணனுடைய உறவு கிடைத்தற்குப் பழம் பிறப்பில் தவம் செய்திருக்க வேண்டும் என்பது கருத்து. பணித்ததற் கொண்டு - பணித்ததனைக் காரணமாகக் கொண்டு. தகை கொள்வேந்தன் - தருசகன். தமர் - தன்னமைச்சர்கள். செங்கடைக்கண் - வேற்கண், எனத் தனித்தனி கூட்டுக. வெள்வளை - சங்கவளை. பணைத்தோள் - மூங்கில் போன்ற தோளுமாம். தங்கை : பதுமாபதி, உதயணனோடு புணர்க்கும் சிந்தையனாகி என்க.