பக்கம் எண் :

பக்கம் எண்:378

உரை
 
3. மகத காண்டம்
 
21. மகட்கொடை வலித்தது
 
         
     30    மந்திர மறிந்த தந்திர முதுமகள்
           செந்தளிர்க் கோதைக்குச் சேடநீட்டிப்
           பொலிக நங்கை பொருபடை யழித்த
           வலிகெழு நோன்றாள் வத்தவ ரிறைவன்
           யானை வணக்கும் வீணை வித்தகன்
     35    துதைமலர்ப் பைந்தா ருதையண குமரற்கு
           நேர்ந்தன னின்னை நெடுந்தகை யின்றெனத்
           தீர்ந்த கோட்டியுட் டெரிந்தன ளுணர்த்தத்
 
           (ஒரு முதுமகள் பதுமாபதிக்கு அறிவித்தல்)
               30 - 37 : மந்திரம் ......... உணர்த்த
 
(பொழிப்புரை) தருசகன் தன்னமைச்சரோடு ஆராய்ந்து துணிந்த செய்தியை அறிந்த உபாயமிக்க மூதாட்டியொருத்தி சிவந்த தளிராற்புனைந்த மாலையை யணிந்த பதுமாபதியின்பாற் சென்று தான் செய்த கடவுள் வழிபாட்டுச் சேடத்தை அப்பெரு மகளுக்கு வழங்கி, ''நங்காய்! நீ பொலிவுற்று வாழ்க! நம்மேல் வந்த பகைப்படைகளை அழித்த வலிமிக்க யற்சியையுடையோனும்,வத்தவநாட்டு மன்னனும், யானைகளை வணக்கும் தெய்வயாழ்ப்புலவனும், செறிந்தலராற்புனைந்த பசிய மாலையையுடையவனும் ஆகிய உதயணகுமரனுக்கு உன்னை வழங்குதற்கு நெடிய புகழையுடைய நம் மன்னன் இற்றைநாள் துணிந்துள்ளான்'' என்று அப்பெருமகள் தன் தோழியர் கூட்டத்தினின்றும் தனித்திருந்த செவ்விநோக்கி அறிவியாநிற்ப; என்க
 
(விளக்கம்) மந்திரம் - சூழ்ச்சி. தந்திரம் - உபாயம். நூலுமாம் : கோதைக்கு : பதுமாபதிக்கு. சேடம் - கடவுளை வழிபட்ட மலர் முதலியன. இவற்றை நின்மாலியம் என்று கூறுப, 'பொலிக' நங்கை என்றது வாழ்த்துரை. வீணை வித்தகன் - யாழ்ப்புலவன். நெடுந்தகை : தருசகன். தீர்ந்த கோட்டியுள் : கோட்டி தீர்ந்தபொழுது என்றவாறு; அஃதாவது தோழியர் கூட்டத்தினின்றும் தனித்திருந்த செவ்வியில் என்றபடியாம்.