உரை |
|
3. மகத காண்டம் |
|
21. மகட்கொடை வலித்தது |
|
துப்புறழ் செவ்வாய் துளங்குபு
நிரைத்த முத்துறழ்
முறுவன் முகிழ்த்த முகத்தள் 40
மந்திர நாவி னந்தணன் கேண்மை
இருநிலம் பேரினுந் திரித
லின்றெனப் பெருநல
மாத ரொருமை யுள்ளமொடு
|
|
(பதுமாபதி
எண்ணுதல்)
38 - 43 : துப்பு.........இருப்ப
|
|
(பொழிப்புரை) அது கேட்ட பவளம்போன்று சிவந்த
திருவாயையுடைய அப்பதுமாபதி நங்கை உளம் நடுங்கி நிரல்பட்ட முத்துப்போன்ற தன் பற்கள்
சிறிது தோன்றுமளவு புன்முறுவல் பூத்த முகத்தினையுடையவளாய்த் தன் நெஞ்சினுள்ளே ''என்னே!
இஃதென்னே! யான் மறைமொழி பயின்ற செந்நாவினையுடைய அந்தணனாகிய மாணகனோடு
கொண்டுள்ள காதற்கேண்மை இப்பெருநிலம் பிறழ்ந்தாலும் பிறழ்வதொன்றன்று'' என்று மிகப்
பெரிய பெண்மை நலமுடைய அப்பதுமாபதி ஒருமை நெஞ்சத்தோடு இச்செய்தி வாய்மையாயின்
யான் இறந்துபடுதலே தகுதியாம் என்னுந் துணிவோடு பின்னுமிருந்து வாழ்வதனைக் கருதாளாய்
அம்மாணகனோடு கூடும் வழியைத் தன்னுள் ஆராய்வாளாகி இருப்ப,
என்க.
|
|
(விளக்கம்) துப்பு - பவளம். துளங்குபு - நடுங்கி. முறுவல் -
பல் இகழ்ச்சியால் பதுமாபதிக்கு இப்பொழுது நகை பிறந்தது; என்னை ? ''எள்ளல் இளமை
பேதமை மடனென்று உள்ளப்பட்ட நகை நான் கென்ப'' (தொல். மெய்ப்பாடு-4)
என்பதோத்தாகலின் என்க. மந்திரம் - மறைமொழி. அந்தணன் : மாணகன். திரிதல் -
பிறழ்தல். பெருநல மாதர் : பதுமாபதி. ஒருமையுள்ளம் - கவர்த்தலில்லாது ஒருமையுற்ற
நெஞ்சம். வாழ்வது வலியாள் என்றமையால் சாவதனைத் துணிந்து
என்க.
|