பக்கம் எண் :

பக்கம் எண்:380

உரை
 
3. மகத காண்டம்
 
21. மகட்கொடை வலித்தது
 
           வாழ்வது வலியாள் சூழ்வன ளிருப்ப
           அரும்பொரு ணாவி னமைச்சன் சேதியர்
     45    பெரும்பெய ரண்ணலைப் பொருந்துபு வணங்கிக்
           காவலன் கருதிய கட்டுரை யுணர்தி
           பூவலர் தாரோய் புனைகழ னோன்றாள்
           எம்மிறை மாற்ற மிசைப்பேன் யானெனத்
           தன்னமர் தோழரொடு மன்னவன் கேட்பப்
 
         (அமைச்சன் உதயணன்பாற் சென்றுதருசகன்
                  கருத்தை அறிவித்தல்)
             44 - 49 : அரும்பொருள்.........கேட்ப
 
(பொழிப்புரை) உணர்தற்கரிய நுண்பொருள்களையும் ஆராய்ந்து உணர்த்தும் செந்நாவினையுடைய அவ்வமைச்சன் சேதிநாட்டினர் மன்னனாகிய பெரும்புகழையுடைய அவ்வுதயணனை யெய்திக் கைகூப்பி வணங்கி ''மலர்விரிந்த மாலையினையுடையோய் ! வீரக்கழல் கட்டிய வலிய முயற்சியினையுடைய எங்களரசன் கூறிய மொழியினைக் கொணர்ந்துள்ளேன்; அவற்றை யான் கூறுவேன்: வேந்தே! எம்மரசன் கருதிக் கூறிய பொருள் பொதிந்த மொழிகளைத் திருச்செவி ஏற்றருளுக'' என்று கூறி அவ்வுதயணன் தன்னை விரும்பும் உருமண்ணுவா முதலிய தோழரோடு ஒருங்கிருந்து கேட்பக் கூறுபவன்; என்க.
 
(விளக்கம்) அரும்பொருள் - உணர்தற்கரிய நுண் பொருள் சேதியரண்ணல்: உதயணன். காவலன் : தருசகன். கட்டுரை - பொருள் பொதிந்த மொழி. எம்மிறை - எங்களரசன். மன்னவன் : உதயணன்.