பக்கம் எண் :

பக்கம் எண்:381

உரை
 
3. மகத காண்டம்
 
21. மகட்கொடை வலித்தது
 
         
     50    பயங்கெழு வையத் துயர்ந்த தொல்சீர்
           விழுத்திணைப் பிறந்துதம் மொழுக்கங் குன்றாப்
           போரடு மன்னர் புலம்பு முந்துறீஇ
           ஆரஞ ருழக்க லறிவெனப் படாது
           நீர்முதன் மண்ணகஞ் சுமந்த நிறைவலி
     55    தான்முழுது கலங்கித் தளரு மாயின்
           மலைமுத லெல்லா நிலைதளர்ந் தொடுங்கும்
 
                       (இதுவுமது)
                50 - 56 : பயம் ......... ஒடுங்கும்
 
(பொழிப்புரை) ''சிறந்த பயன்கள் நிரம்பிய இவ்வுலகத்தின் கண் உயர்ந்த பழைய புகழையுடைய சிறந்த குலத்தின்கட் பிறந்து மேலும் தமக்குரிய நல்லொழுக்கங்களிலே குறைதலில்லாதவரும் தம் பகைவரைப் போரின்கண் வெல்லும் ஆற்றலுடையவரும், ஆகிய சிறந்த மன்னர்கள் துன்பமுற்றபொழுது அதனை மேற்கொண்டு தீர்தற்கரிய அத்துன்பத்திலே கிடந்துழலுதல் அறிவுடைமை என்று கருதப்படாது, நீரை முதலாகவுடைய இந்நிலவுலகத்தைத் தம் தோளிற்சுமந்த அவர்தம் நிறைந்த ஆற்றல் முழுவதும் இடுக்கணுற்றுழி நிலை கலங்கித் தளருமாயின், இப்பேருலகத்தே நிலையியற் பொருளாகிய மலை முதலிய எல்லாப் பொருள்களும் நிலைகலங்கி மறைந்துகெடும்'' என்க.
 
(விளக்கம்) பயம் - பயன். தொல்சீர் - பழைய புகழ். விழுத்திணை- சிறந்த குலம். ஆரஞர் - தாங்குதற்கரிய துன்பம். அறிவெனப் படாது - அறிவன்று. சுமத்தற்குக் காரணமான நிறைவலி என்க. மலை என்றது நிலையியற் பொருளாகிய மலை என்பதுபட நின்றது. ஈண்டு,
        ''சான்றவர் சான்றாண்மை குன்றி னிருநிலந்தான்
         தாங்காது மன்னோ பொறை'' (திருக்குறள் 990)
எனவரும் அருமைத் திருக்குறளையும் நினைக.