பக்கம் எண் :

பக்கம் எண்:383

உரை
 
3. மகத காண்டம்
 
21. மகட்கொடை வலித்தது
 
         
     60    அற்றே யன்றிக் கொற்றக் கோமான்
           தானுந் தனிமையொ டென்றலை வந்தனன்
           ஆனா வுவகையி னமைந்தபுக ழுடையன்
           மேனாட் கொண்ட மிகுதுயர் நீக்கி
           மறுத்தல் செல்லாச் சிறப்பு முந்துறீஇ
     65    அற்றமி னண்பின் யாப்பே யன்றியோர்
           சுற்றப் பந்தமும் வேண்டினே னென்றனன்
           கொற்றவன் வலித்த திற்றென வுரைப்பச்
 
                        (இதுவுமது)
                 60-67 : அற்றே.........உரைப்ப
 
(பொழிப்புரை) ''அதுவேயுமல்லாமல். வெற்றி வேந்தனாகிய அவ்வுதயணன்றானும் தனிமைத்துன்பத்தோடே என்பால் வந்தருளினான். அதனால் யானும் கெடாத மகிழ்ச்சியோடே நன்கு பொருந்திய பெரும் புகழையுடைய அவ்வுதயணன் முன்னாளிலே கொண்டுள்ள பெருந் துயரத்தை அகற்றி அப் பெருமகன் மறுத்தற்கியலாத பெருஞ் சிறப்புக்களையுஞ்செய்து சோர்வில்லாத நட்புரிமையினாலே யான் கொண்ட தொடர்போடன்றி மேலும் அவனுக்கு மைத்துனன் என்னுமொரு உறவுத் தொடர்புங் கொள்ளப் பெரிதும் விரும்பினேன் என்று என்பால் சொல்லிவிடுத்தனன். பெருமானே! எம் மன்னவன் கருதியது இஃதாம்'' என்று அவ்வமைச்சன் கூறாநிற்ப; என்க.
 
(விளக்கம்) அற்றே யன்றி - அங்ஙனம் நிலைதளர்ந்து அழிதலேயன்றி என்றவாறு. கோமான்: உதயணன். என்றலை - என்பால். மேனாள் - முன்னாள். மறுத்தல் செல்லா - மறாஅத. அற்றம் - சோர்வு. நண்பின்யாப்பு - நட்புத்தொடர்பு. சுற்றப்பந்தம் - உறவுத்தொடர்பு. இற்று - இது.