பக்கம் எண் :

பக்கம் எண்:385

உரை
 
3. மகத காண்டம்
 
21. மகட்கொடை வலித்தது
 
           கோல்வளைப் பணைத்தோட் கொடுங்குழைக் காதின்
           நீலத் தன்ன நெறியிருங் கூந்தலைப்
     80    பால்வகை புணர்க்கும் படிமை கொல்லென
           இனையவை பிறவு மனவயி னினைஇ
           யான்குறை கொள்ளும் பொருளினை மற்றிவன்
           தான்குறை கோட றவத்தது விளைவென
           உவந்த வுள்ளமொடு கரந்தன னுரைக்கும்
 
                        (இதுவுமது)
                78 - 84 : கோல்.........உரைக்கும்
 
(பொழிப்புரை) திரண்ட வளையலையும் பணைத்த தோளினையும் வளைந்த குழையினையுடைய காதினையும் நீலமணி போன்ற நிறமுடைய நெறிப்புடைய கரிய கூந்தலையுமுடைய அப்பதுமாபதி ஊழ்வகையாலே நம்மொடு புணர்க்கும் புண்ணியத்தினாலேயோ? இத்தருசகன் இம்முடிவினைத் தன்மனத்தே கொண்டது என்று இன்னோரன்ன பிறவற்றையும் அவ்வுதயணன் தன்னெஞ்சின் கண் நினைந்து மேலும் யான் அவன்பாற் சென்று வேண்டிக் கோடற்குரியதொரு பொருளை அவனே என்னிடம் வேண்டிக் கோடல் யாம் முற்செய்த தவத்தின் பயனேயாகும் என்று பெரிதும் மகிழ்ந்த உள்ளத்தோடு அவ்வுள்ளத்தை அவ்வமைச்சன்  காணாதபடி மறைத்துக்கொண்டு உரைப்பான்; என்க.
 
(விளக்கம்) கோல் - திரட்சி. கொடுங்குழை - வளைந்த குழை. நீலம் - நீலமணி. நெறி - நெறிப்பு. கூந்தலை - பதுமாபதியை. பால் வகை - ஊழ்வகை. படிமை - புண்ணியம். மனவயின் - மனத்தின் கண். தவத்ததுவிளைவு - முன்செய்த தவத்தின் பயன். கரந்தனன் - அம்மகிழ்ச்சியை மறைத்தவனாய். எனவே வஞ்சகமாய் உரைக்கும் என்றார் ஆயிற்று.