உரை |
|
3. மகத காண்டம் |
|
21. மகட்கொடை வலித்தது |
|
85 மண்ணகத்
திறைவன் மறமாச் சேனன்
ஒண்ணுதற் பாவை யொருபெருங்
கிழத்தி
மண்ணக வரைப்பின் மகளிர்
மற்றுத்தன்
வனப்பெடுத் துரைக்கென வயங்கழற்
குளிப்ப
மனத்தெழு கவற்சியொடு மண்முத
னீக்கி 90 நயத்தகு மாதரொ
டமைச்சனை யிழந்தினி
வாழே னென்று வலித்த
நெஞ்சமொடு
போகிய தெல்லாம் பொய்யே போலும
|
|
(உதயணன் உள்ளொன்றுவைத்துப்
புறமொன்று
பேசல்)
85 - 92 : மண்.........போலும்
|
|
(பொழிப்புரை) ''அன்புடையீர்! நிலவுலகத்து
மன்னர்மன்னனாகிய மறமாச்சேனன் என்னும் சிறப்புப் பெயருடைய பிரச்சோதனனுடைய மகளாகிய
ஒள்ளிய நுதலையுடைய பாவையும் என் ஒப்பற்ற கோப்பெருந்தேவியும் ஆகிய வாசவதத்தை
இவ்வுலகத்திலுள்ள குலமகளிர்கள் எல்லாம் தன்னுடைய பேரழகினை எக்காலத்தும் உவமையாக
எடுத்துக் கூறுவாராக என்று கருதித் தான் ஒளி நெருப்பின்கண் மூழ்கி மறையாநிற்ப, யான்
அவளையிழந்து மனத்தின்கண் எழுந்த துன்பத்தோடு என் நாட்டை முற்றத்துறந்து
விரும்பத்தகுந்த தேவியையும் அமைச்சனாகிய யூகியையும் இழந்தும் இனி உயிர்வாழுதல் இலேன்
என்று துணிந்த நெஞ்சத்தோடு சென்ற செயலெல்லாம் பொய்ச்செயலே ஆயினவோ;''
என்க.
|
|
(விளக்கம்) இறைவன் - ஈண்டுச் சக்கரவர்த்தி என்பது பட
நின்றது. மறமாச்சேனன் என்றது பிரச்சோதன மன்னனை. இஃது அவன் மறச் சிறப்புப்பற்றி
எழுந்த பெயர். பாவையாகிய கிழத்தி என்க, என்றது வாசவதத்தையை. இன்னும் உலகிலிருந்து
வயது முதிர்ந்து அழகழியா முன்னர் ஒப்பற்ற இப்பேரழகு மகளிர்க்கு எக்காலத்தும்
உவமையாகுக என்று கருதி வாசவதத்தை தீக்குளித்தாள் என்றவாறு. கவற்சி - துன்பம். மண் -
நாடு. அமைச்சன் : யூகி. போலும் : ஒப்பில்
போலி.
|