பக்கம் எண் :

பக்கம் எண்:387

உரை
 
3. மகத காண்டம்
 
21. மகட்கொடை வலித்தது
 
           இன்ப மெய்தலெ னன்பவட் கொழிந்தனென்
           வாழ்ந்த காலை யல்ல தியாவர்க்கும்
     95    ஆழ்ந்த காலை யன்பு மில்லெனப்
           புறத்தோ ருரைக்கும் புன்சொற் கட்டுரை
           நிறத்தே றெஃகி னனைய வாதலின்
           ஒத்த நிலைமையே னல்லே னொழிகென
           வத்தவர் கோமான் வஞ்சமொடு மறுப்ப
 
                        (இதுவுமது)
                 93 - 99 : இன்பம்.........மறுப்ப
 
(பொழிப்புரை) ''ஐய ! அப்பெருமகளின் பொருட்டு வாழ்வொழிந்த  நான் இனி இன்பம் எய்துதல் என்னும் இது என்னாம்? அங்ஙனம் வாழப்புகின், 'வாழ்ந்தகாலை யல்லது யாவர்க்கும் ஆழ்ந்த காலை அன்பும்இல்' என்னும் பழமொழிக்கேற்ப அயலோர் உரைக்கும் புல்லிய பழிபொதிந்த உரை எனது மார்பில் பாயும் வேற்படையை ஒப்பனவாதலின், யான் நும்முடைய மன்னன் கருத்திற்கு ஒத்த நிலைமையுடையேன் அல்லேன். ஆகலின் நுங்களரசன் இக்கருத்தினை விட்டொழிக'' என்று அவ்வத்தவர் கோமான் வஞ்சத்தோடு மறுத்துக் கூறாநிற்ப; என்க.
 
(விளக்கம்) அவட்கு ஒழிந்தனன் - அன்புடைய வாசவதத்தையின் பொருட்டு வாழ்வொழிந்தேன் என்க ; அவட்கு அன்பொழிந்தனனாய் இன்ப மெய்தல் என் எனினுமாம். ''வாழ்ந்த.........இல்'' இத்தொடர் ஒரு பழமொழி. இதனொடு, ''காலாடு போழ்திற் கழிகிளைஞர் வானத்து, மேலாடு மீனிற் பலராவ - ரேலா, இடரொருவ, ருற்றக்காலீர்ங்குன்ற நாட, தொடர்புடையே மென்பார் சிலர்,'' ''உண்டாய போழ்தி லுடைந்துழிக் காகம்போற், றொண்டா யிரவர் தொகுபவே - வண்டாய்த், திரிதருங் காலத்துத் தீதிலிரோ வென்பா ரொருவரு மிவ்வுலகத் தில்.'' (நாலடி. 113, 384.); என  வருஞ் செய்யுட்களையும் நினைக. புறத்தோர் - பகைவருமாம்; புன்சொற் கட்டுரை - பழி பொதிந்த உரை. நிறத்தேரெஃகின் - மார்பில் ஊடுருவும் வேல்போல. அக்கருத்தினை ஒழிக என என்க.