பக்கம் எண் :

பக்கம் எண்:388

உரை
 
3. மகத காண்டம்
 
21. மகட்கொடை வலித்தது
 
         
     100    மிக்க பெருங்குடிப் பிறந்த மாந்தர்க்
           கொப்பின் றம்மநின் னுரையென வணங்கி
           மத்த யானை வணக்கு நல்லியாழ்
           வித்தக வீரவது பெற்றனென் யானென
           மறுத்து மந்திரி குறைக்கொண் டிரப்பத்
 
                   (அமைச்சன் கூறுதல்)
                 100 - 104 : மிக்க.........இரப்ப
 
(பொழிப்புரை) அதுகேட்ட அவ்வமைச்சன், ''அம்மவோ! பெருமானே! நின் மறுமொழி நின்னைப்போலப் புகழ்மிக்க பெருங்குடியிற் பிறந்த சான்றோர்க்கு ஒப்புடையதன்று'' என்று கைகூப்பி வணங்கிச் ''செருக்குடைய யானையை வணக்கும் நல்ல யாழ்ப்புலவனே! மறவர் மறவோய்! யான் எனது வேண்டுகோளை  ஒருதலையாகப் பெற்றேன்காண்!'' என்று கூறிமறுத்து அவ்வமைச்சன் மீண்டும் வேண்டிக்கொண்டு இரவாநிற்ப, என்க.
 
(விளக்கம்) புகழ்மிக்க பெருங்குடி என்க. அம்ம : கேட்பித்தற் பொருட்டு. அது - அவ்வுடன்பாட்டை, நின் உடன்பாட்டைப் பெறுவேன் என எதிர்காலத்தால் கூறற்பாலதனைப் பெற்றனென் என்று இறந்தகாலத்தாற் கூறியது, ''விரைவினும் மிகவினும் தெளிவினும் இயல்பினும், பிறழவும் பெறூஉ முக்காலமும் ஏற்புழி'' என்னும் வழுவமைதியால் தெளிவுபற்றிக் கூறப்பட்டதென்க. (நன். 384.)