பக்கம் எண் :

பக்கம் எண்:389

உரை
 
3. மகத காண்டம்
 
21. மகட்கொடை வலித்தது
 
         
     105     தெரிபொருட் கேள்வித் தெரிசக குமரன்
            தானு நீயு மாகல் வேண்டலின்
            மாற்று மாற்ற மில்லென மற்றவற்
            கருளொடு புணர்ந்த வன்புமிகு கட்டுரை
            பொருளொடு புணர்ந்தவை பொருந்தக் கூறலின்
 
                    (உதயணன் உடன்படல்)
              105 - 109 : தெரிபொருள்.........கூறலின்
 
(பொழிப்புரை) அது கேட்ட உதயணன், ''ஐயனே! அறிதற்குரிய உறுதிப்பொருள்களின் கேள்வியில்மிக்க நும்மரசனாகிய தருசகனும், நீயும் என்னுடைய ஆக்கத்தையே பெரிதும் விரும்புதலால்  நுங்கள் வேண்டுகோளை மாற்றும் மொழி இனி எம்பாலில்லை'' என்று தன் உடன்பாட்டை உணர்த்திப் பின்னரும் அத்தருசக மன்னனுக்குத் தனது அருளோடு விரவிய அன்பு மிக்க பொருளொடு புணர்ந்த கட்டுரை பலவும் பொருந்துமாறு கூறி விடுத்தலாலே; என்க.
 
(விளக்கம்) தெரிபொருள்: வினைத்தொகை. தெரிசக குமரன் -  தருசக குமரன். ஆகல் - ஆக்கத்தை. மாற்றும் மாற்றம் - மறுக்கும் மொழி.