பக்கம் எண் :

பக்கம் எண்:391

உரை
 
3. மகத காண்டம்
 
22. பதுமாபதி வதுவை
 
            அகநனி புகன்றாண் டமைச்சன் போகித்
            தகைமிகு தானைத் தருசகற் குறுகி
            மாற்றோர்ச் சாய்த்தவன் மறுத்த வண்ணமும்
            ஆற்றல் சான்றவவ னன்புகந் தாகத்
      5     தொல்லுரைக் கயிற்றிற் தொடரப் பிணிக்கொளீஇ
            வல்லிதி னவனை வணக்கிய வண்ணமும்
            பல்பொரு ளாளன் பணிந்தன னுரைப்ப
 
            (அமைச்சன் தருசகனுக்குக் கூறுதல்)
                1 - 7 : அகம்............உரைப்ப
 
(பொழிப்புரை) இவ்வாறு உதயணனுடைய உடன்பாடு பெற்றுக் கொண்டு அவனைத் தன் உள்ளத்தே பெரிதும் விரும்பியவனாய், மீண்ட அவ்வமைச்சன் சென்று படைத்தகைமை மிக்க தானையையுடைய தருசக மன்னனை யணுகித் தன் பகைவரை யெல்லாம் வென்ற உதயணகுமரன் அம் மன்னவன் கருத்தினை மறுத்துக் கூறியவகையையும், சொல்லாற்றல் நிறைந்த அவ்வமைச்சன் தன் அன்பினைத் தூணாகக் கொண்டு பழை மையுடைய சொல்லாகிய கயிற்றினாலே கட்டித் தன் கூற்றை அவன் தொடர்ந்து ஏற்றுக் கொள்ளும்படி செய்து வன்மையோடே, அவ்வுதய ணனை உடன்படுவித்த தன்மையையும் பல்வேறு பொருளையும் பயின்று ணர்ந்தவனாகிய அவ்வமைச்சன் பணிந்து கூறாநிற்ப ; என்க.
 
(விளக்கம்) ஆண்டு - அவ்வரண்மனைக்கு. தசை - தோற்றப் பொலிவு. மாற்றோர்ச்சாய்த்தவன் : உதயணன். அவன் : அவ்வமைச்சன். கந்து - தூண். உரையாகிய கயிறு என்க. அவனை : உதயணனை. வணக்கிய - உடன்படுவித்த. பல்பொருளாளன் : அமைச்சன்.