பக்கம் எண் :

பக்கம் எண்:393

உரை
 
3. மகத காண்டம்
 
22. பதுமாபதி வதுவை
 
         
      10     வடுத்தொழி லகன்ற வத்தவர் பெருமகன்
            மாய வுருவொடு மாடத் தொடுங்கிய
            ஆய கேண்மைய னந்தண னென்பது
            சேயிழை மாதர் தேறல ளாகி
            ஒன்றுபுரி யுள்ளமொ டொன்றா ளாதலின்
      15     நன்றுபுரி நாட்டத்து நானவ னாதல்
            அறியத் தேற்றுவோ ரயல்வே றில்லென
            நெறியிற் கொத்த நீர்மை நாடி
 
                 (உதயணன் எண்ணுதல்)
                  10 - 17 : வடு.........நாடி
 
(பொழிப்புரை) இனி, பழித்தொழிலில்லாத அவ்வுதயணகுமரன், தானே, வேற்றுருவத்தோடு அவளது கன்னிமாடத்தின் கண் ஒடுங்கியவனும், அவளோடு உண்டான காதற் கேண்மையையுடைய அந்தணனும், ஆகியவன் என்னும், இவ்வுண்மையைச் சிவந்த அணிகலன்களையுடைய அப்பது மாபதி தெளிய மாட்டாளாய் என்னுடைய திருமணத்திற்கு ஒன்றுபட்ட நெஞ்சத்தோடு உடன்படமாட்டா ளாதலின், அவளுக்கு நன்மையே புரியும் நோக்கத்தையுடைய நானே அம்மாணகனாதலை அவள் உணரும்படி தெளி விப்போரும் அவளயலிலே வேறில்லையென்று கருதி, இங்ஙனம் அவள் முரண்படாது ஒத்துவருதற்குரிய வழிக்குரிய தன்மையை ஆராய்ந்து;என்க.
 
(விளக்கம்) வடுத்தொழில் - பழிச்சொல். மாயவுரு - வேற்று வேடம். மாடம் - கன்னிமாடம். அந்தணன் - மாணகன். மாதர் : பதுமாபதி. ஒன்றாள் - உடன்படாள். நெறியிற்கு - முரண்படாது வரும் வழிக்கு. ஒத்த நீர்மை - ஏற்ற தன்மை. அவள் கண்கூடாகக் கண்ட மாணகனும் கேள்வி மாத்திரையான் இப்பொழுதுணருகின்ற உதயணனும், இருவரல்லர், ஒரு வரே என்று அறிதற்கு வழியின்மையால் அவ்வழியை உண்டாக்குதற்கு ஒத்த வழியை நாடி என்க.