பக்கம் எண் :

பக்கம் எண்:398

உரை
 
3. மகத காண்டம்
 
22. பதுமாபதி வதுவை
 
            தன்னெறி வழாஅத் தருசக குமரன்
            தற்பயந் தெடுத்த கற்பமை காரிகைக்
            கோப்பெருந் தேவிக் கியாப்புடைத் தாகத்
      45    தங்கை திறவயின் வலித்தது மற்றவள்
            இன்பத் தோழியை யிசைச்சற் கிசைத்ததும்
            தெருளக் கூறி யருள்வகை யறிந்து
            வம்மி னென்று தம்மியல் வழாஅப்
            பெருமூ தாளரை விடுத்தலிற் கேட்டே
 
          (தருசகன் தன் தாயின் உடன்பாட்டை அறிதல்)
                42 - 49 : தன்.........விடுத்தலின்
 
(பொழிப்புரை) அஃதுணர்ந்த தனது நல்ல நெறியினின்றும் வழுவாத அத்தருசக குமரன் தன்னை ஈன்றெடுத்தவளும் கற்பென்னுந் திண்மையு டையவளும் கோப்பெருந்தேவியும் ஆகிய தன் நற்றாய்க்குத் தான் தன் தங்கையாகிய பதுமாபதியை உதயணனுக்கு மணம் செய்விக்க உறுதி யா கத் துணிந்ததனையும் அப்பதுமாபதியின் இன்பத்திற்குக் காரணமான தோழியாகிய யாப்பியாயினியை இசைச்சனுக்கு மணம் செய்விக்க உடன் பட்டுக் கூறியதனையும், அப்பெருந்தேவி நன்கு தெரிந்துகொள்ளும்படி கூறி, அப்பெரியாள் அதற்குக் கூறும் மறுமொழியினையும் அறிந்து வாருங் கோள்! என்று சொல்லித் தமது சான்றாண்மையின்கண் வழுவாத மூதாள ராகிய சான்றோரை ஏவாநிற்றலால்; என்க.
 
(விளக்கம்) நெறி - ஒழுக்கம். வழாஅ - வழுவாத. காரிகை-அழகு. யாப்பு - உறுதி. வலித்ததும் - துணிந்ததும். அவள் : பதுமாபதி. தோழி : யாப்பியா யினி. தெருள - உணர்ந்துகொள்ளும் படி. வம்மின் - வாருங்கோள். தம்மியல் - தமக்குரிய பண்பு. மூதாளர் - முதியோர்.