பக்கம் எண் :

பக்கம் எண்:400

உரை
 
3. மகத காண்டம்
 
22. பதுமாபதி வதுவை
 
            பதுமா நங்கையு மதன்றிற மறிந்து
            மாணகற் பிரிந்தவென் மம்மர் வெந்நோய்க்
            காண மாகிய வாயிழை தனக்கு
            நீங்குதிற னுண்டெனிற் றாங்குதிற னறியேன்
      60    விலக்குத லியல்பு மன்றாற் கலக்கும்
            வல்வினை தானே நல்வினை யெனக்கென
            ஒள்ளிழை மாத ருள்வயி னினைஇ
 
                 (பதுமாபதியின் செயல்)
               56 - 62 : பதுமா.........நினைஇ
 
(பொழிப்புரை) இனி, பதுமாபதிதானும் யாப்பியாயினியின் திருமணச் செய்தியை யறிந்து ''அந்தோ ! என் ஆருயிர்க் காதலனாகிய அம்மாணகன் என்னைப் பிரிந்தமையாலுண்டான மயக்கமுடைய வெவ்விய என்னுடைய துன்பத்திற்குப் பாதுகாப்பாகிய அழகிய அணிகலன்களையுடைய யாப்பியா யினிக்கும் என்னைப் பிரிந்து செல்லும் நிகழ்ச்சி ஒன்று உண்டா கின் இனி என் காதலனைப் பிரிந்த அப்பெருந்துன்பத்தைப் பொறுத்துக் கொண்டிருத்தற்கு வழியொன்றும் அறிகிலேனே! யான் என் செய்கோ! அவள் பிரிவினைத் தடுத்தலும் அவள்பால் அன்புடையார்க்குத் தகுதியன்றே. ஆராயின், என்னை இங்ஙனம் கலங்கச் செய்கின்ற வலிய இவ்வினையே எனக்கு நல்வினையாகவுமுளது'' என்று தனக்குத் தெளிவ டைந்து; என்க.
 
(விளக்கம்) அதன் திறம் - அத்திருமணத்தின் தன்மை. மம்மர் - மயக்கம். ஆணம் - பாதுகாப்பு. ''பேணிலும் வரந்தர மிடுக்கிலாத தேவரை ஆணமென்றடைந்து வாழும் மாதர்காள்'' (திவ். திருச்சந்த. 69) எனவுமறிக. தனக்குத் துன்பந் தருதலால் வல்வினை என்றும், தன் தோழிக்கு ஆக்கம் தருதலால் நல்வினையென்றும் நினைத்தனள். மாதர் : பதுமாபதி.