உரை |
|
3. மகத காண்டம் |
|
22. பதுமாபதி வதுவை |
|
மடுத்தணி கலனு மாலையும்
பிறவும்
கொடுத்தன ளாகிக் கோமான் பணித்த
65 வடுத்தீர் வதுவையின் மறந்தனை
யொழியாது
வல்லே வாவென மெல்லியற்
புல்லிக்
கவற்சி கரந்த புகற்சிய
ளாகிச்
சிறுமுதுக் குறைவி யறிவொடு
புணர்ந்த
தாய ரியற்கை சேயிழைக் காற்றித்
70 தானுடை யுழைக்கல மெல்லாந்
தரீஇச்
சேயொளிச் சிவிகையொடு சேயிழைக் கீயத் |
|
(இதுவுமது) 63
- 71 : மடுத்தணி.........ஈய |
|
(பொழிப்புரை) அவ்வியாப்பியாயினிக்கு வேண்டிய அணிகலன்களும்
மாலையும் பிறவும் பேழைகளில் நிறைத்து வழங்கிப் பின்னர், அத்தோ ழியை நோக்கி 'ஏடி
! நம்மன்னவன் பணித்தருளிய குற்றமற்ற நினது திருமணத்தின்கண் நீ பெரிதும் மகிழ்ந்து
என்னை மறந்து நின் காதல னோடேயே இருந்து விடாதே கொள் ! விரைந்து என்னைக் காணவும்
வரு வாயாக'' என்று அத்தோழியை ஆர்வத்துடன் தழுவிக் கொண்டு தன் துய ரத்தையும்
மறைத்துக்கொண்டு அவள் நலத்தைப் பேணுவதிலேயே விருப்பமுடையவளாய் இளமையிலேயே பேரறிவு
வாய்க்கப்பெற்ற அப்பதுமாபதி நங்கை அவள்பால் தாய்மை யுணர்ச்சியோடு கூடியவளாய்
அத்தாயர் செய்யும் சிறப்பெல்லாம் அவளுக்குத் தானே செய்து மேலும் தனக்குரிய
உழைக்கலங்களையெல்லாம் வரவழைத்து அவற்றைச் சிவந்த ஒளி யையுடைய சிவிகையோடு
சேர்த்து அத்தோழிக்கு வழங்காநிற்ப ; என்க. |
|
(விளக்கம்) கலனும் மாலையும் மடுத்து என்க. மடுத்து -
நிறைத்து, பேழையில் நிறைத்தென்க. கோமான்: தருசகன். வடு - குற்றம். வதுவை
யினாலுண்டான மகிழ்ச்சியால் மறந்தொழியாதென்க. வல்லே - விரைந்து. மெல்லியல் :
யாப்பியாயினி. கவற்சி - துன்பம். புகற்சி - விருப்பம். சிறு முதுக் குறைவி -
இளமையிலேயே பேரறிவு படைத்தவள் என்றது பதுமாப தியை. தாய்மையறிவொடு புணர்ந்த தாயர்
என்க : அறிவு ஈண்டு உணர்ச்சிமேனின்றது. உழைக்கலம் - பக்கத்தில்
வைத்துக்கொள்ளற்குரிய அடி சிற்கலம் முதலியன. சிவிகை -
பல்லக்கு. |