பக்கம் எண் :

பக்கம் எண்:402

உரை
 
3. மகத காண்டம்
 
22. பதுமாபதி வதுவை
 
            தங்கை தலைமை தன்னையு முவந்து
            கொங்கலர் கோதையைக் கொடுக்குநா ளாதலின்
            இலக்கணச் செந்தீத் தலைக்கையி னிரீஇ
      75    இழுக்கா வியல்பி னிசைச்ச குமரன்
            விழுப்பெரு விதியின் வேட்டவட் புணர்கென
            முழுப்பெருங் கடிநகர் முழுதுட னுணரக்
            கோப்பெரு வேந்தன் யாப்புறுத் தமைத்தபின்
 
                  (தருசகன் செயல்)
               72 - 78 : தங்கை.........பின்
 
(பொழிப்புரை) இவ்வாறு தன் தங்கையாகிய பதுமாபதி நங்கை தானே தாயாகும் தலைமை ஏற்று அவ்வியாப்பியாயினிக்கு வழங்கிய வரிசைக ளை யும் உணர்ந்து தருசகன் மகிழ்ந்து அற்றை நாள் தேன்விரிகின்ற மலர்மாலையணிந்த யாப்பியாயினியை இசைச்சனுக்கு மணம் புணர்க்கும் நன்னாளாதலின், தன்னெறியில்  இழுக்குதலில்லாத நற்பண்புடைய அவ்வி சைச்ச குமரன் மறை விதிப்படி வளர்த்த செந்தீயின் முன்னிலையிலே யாப்பியாயினியுடன் அமர்ந்திருந்து சிறந்த பெரிய மறை விதியினால் கர ணம் நிகழ்த்தி அப்பதுமாபதியை மணம் புணர்வானாக என்று பணித்துப் பெரிய காவலையுடைய அவ்விராசகிரிய நகரத்தின் கண் வாழும் மாந்தர்கள னைவரும் அறியும்படி அப்பெருமன்னன் ஆவன செய்து அமைத்தபின்னர் ; என்க.
 
(விளக்கம்) தலைமை - தாயாகும் தலைமைபெற்று அத்தாய் செய்வனவெல்லாம் செய்தமை. இனி, பிறர் உணர்த்தாமலே தானே தலைமை செய்து வழங்கிய செயலை எனினுமாம். கோதை : யாப்பியாயினி. இலக்க ணைச் செந்தீ - மறை கூறும் நெறிப்படி வளர்த்த சிவந்த நெருப்பு. தீத்தலைக்கையின் - தீயின் முன்னிலையில் : கோதையை இரீஇ இசைச்சன் வேட்டு அவட்புணர்க என்றியைத்துக்கொள்க.