பக்கம் எண் :

பக்கம் எண்:403

உரை
 
3. மகத காண்டம்
 
22. பதுமாபதி வதுவை
 
            வதுவைச் செல்வத் தொளிநகைத் தோழனை
      80    நீங்கல் செல்லான் பூங்கழ லுதயணன்
            முதற்கோ சம்பியு மொய்புனல் யமுனையும்
            சிதர்ப்பூங் காவுஞ் சேயிழை மாதர்
            கண்டினி துறைவது காரண மாக
            வண்டிமிர் காவின் மகதத் தகவயின்
      85    வந்தனம் யாமென் றந்தணி கேட்ப
            இன்னிசைக் கிளவி யிறைமக னிசைத்தலிற்
 
                  (உதயணன் செயல்)
            79 - 86 : வதுவை.........இசைத்தலின்
 
(பொழிப்புரை) இனி, இவ்வாற்றால் நிகழாநின்ற திருமணச் செல்வ நன்னாள்களிலே புத்தொளிபடைத்த புன்முறுவலையுடைய தோழனாகிய இசைச்சனை அழகிய வீரக்கழல் கட்டிய உதயண மன்னன் சிறிதும் அகலாதுடனிருப்பவன், ஒருநாள் மணமகளாகிய அவ்வியாப்பியாயினி கேட்கும்படி பிறருக்குக் கூறுவான்போல ''யாங்கள் எம்முடைய தலைநகரமாகிய கோசம்பி நகரத்தையும், நிரம்பிய நீர்ப்பெருக்கினையுடைய யமுனைப் பேரியாற்றினையும், அவ்வியாற்றின் இருமருங்கிலுள்ள மலர்சிந்தும் பூம்பொழில்களையும், சிவந்த அணிகலன்களையுடைய அழகியாகிய பதுமாபதி நங்கை கண்கூடாகக் கண்டு அந்நகரத்திலேயே உறைவது காரணமாக, வண்டுகள் இசைபாடும் சோலைகளையுடைய இம்மகதநாட்டினூடே வந்தேம்! கண்டீர்'' என்று கேட்போர் விரும்புகின்ற இன்னிசை போன்ற இம்மொழி களை இறைமகனாகிய அவ்வுதயணன் கூறுதலாலே ; என்க.
 
(விளக்கம்) வதுவைச் செல்வம் - வதுவையாகிய செல்வம் என்க. நீங்கல் செல்லான் ; நீங்கான் : ஒருசொல். முதற்கோசம்பி - தலை நகரமாகிய கோசம்பி. மொய்புனல் : வினைத்தொகை. சேயிழை மாதர் : பது மாபதி. அந்தணி - யாப்பியாயினி. இன்னிசை போன்ற கிளவி என்க. கிளவி - மொழி. இறைமகன் : உதயணன்.