பக்கம் எண் :

பக்கம் எண்:404

உரை
 
3. மகத காண்டம்
 
22. பதுமாபதி வதுவை
 
            சின்னகை முறுவற் சேயிழை கேளா
            வாணகை மாதரொடு மனைவயி னொடுங்கிய
            மாணகன் வாய்மொழி யிதுவான் மற்றெனத்
      90    தேனார் காந்தட் டிருமுகை யன்ன
            கூட்டுவிர லகற்றிக் கொழுங்கயன் மழைக்கண்
            கோட்டுவனண் மேலைக் குமரனை நோக்கி
            ஐய மின்றி யறிந்தன ளாகி்
 
        யாப்பியாயினி உதயணனே மாணகனென்று உணர்தல்
               87 - 93 : சின்னகை.........ஆகி
 
(பொழிப்புரை) புன்முறுவலையும் சிவந்த அணிகலன்களையும் உடைய மணமகளாகிய யாப்பியாயினி அவ்வுதயணன் கூறிய மொழிகளைக் கேட்டு, இவ்வாய்மொழி ஒளி பொருந்திய பற்களையுடைய பதுமாபதியோடு கன்னிமாடத்தின்கண் கரந்துறைந்த பார்ப்பனனாகிய மாணகனுடைய மொழியே யன்றோ என்றுஐயுற்றவளாய்,  இங்ஙனம் மொழிந்தவன் யார் என அறி வேன் என்று தன்னுள் துணிந்து மணமகனாகிய இசைச்சன் விரலோடு சேர்க்கப்பட்டுள்ள தேன் பொருந்திய காந்தளினது அழகிய அரும்புகளை யொத்த தன் விரலை அகற்றிக்கொண்டவளாய்க் கொழுவிய கயல்மீன் போன்ற குளிர்ந்த தன் கண்களை வளைத்துப் பார்ப்பவள் அவ்வுத யண குமரனைப் பார்த்து, அவன் அம்மாணகனேயாதல் கண்டு மாணக னும் உதயணனும் இருவரல்லர்; ஒருவரே என்னும் உண்மையை ஐயமின்றி உணர்ந்து கொண்டவளாய்;  என்க.
 
(விளக்கம்) சேயிழை : யாப்பியாயினி. மாதரொடு : பதுமாபதியோடு. மனை - கன்னிமாடம். திருமுகை - அழகிய அரும்பு. கூட்டு விரல் - கணவன் விர லோடிணைத்தவிரல். கோட்டுவனள் - வளைத்து. மேலைக்குமரன் : முற்கூறப்பட்ட உதயணன்.