பக்கம் எண் :

பக்கம் எண்:405

உரை
 
3. மகத காண்டம்
 
22. பதுமாபதி வதுவை
 
            வையங் காவலன் வத்தவர் பெருமகன்
      95    பார்ப்பன வுருவொடு பதுமா நங்கையை
            யாப்புடை நெஞ்ச மழித்தன னறிந்தேன்
            ஒப்புழி யல்ல தோடா தென்பது
            மிக்கதென் மனனென மெல்லிய னினைஇ
            நகைத்துணைத் தோழிக்கு நன்னலத் தோன்றல்
      100    தகைப்பெரு வேந்த னாகலின் மிகச்சிறந்
            தானா நன்மொழி தானவட் கொண்டு
            கோட்டிச் செவ்வியுள் வேட்டனள் விரும்பா
            உரைத்த லூற்றமொடு திருத்தக விருப்ப்
 
                     (இதுவுமது)
              94 - 103 : வையம்.........இருப்ப
 
(பொழிப்புரை) நிலவுலகத்தைப் பாதுகாக்குந் தொழிலையுடைய  வத்தவ மன்னனாகிய உதயண நம்பியே மாணகன் என்னும் பார்ப்பனக் கோலத் தோடு வந்து எங்கோமகள் பதுமாபதி  நங்கையினது நிறையுடைய நன்னர் நெஞ்சத்தை அழித்தனன்.  இவ்வுண்மையை யானிப்பொழுது நன்குணர்ந்து கொண்டேன். இக்காதல் நிகழ்ந்துழிக் குலப் பிறப்பாட்டியாகிய அந்நங்கையின்  மனம் தன்னோடு ஒத்த இடத்திற் செல்லுதலன்றி ஒவ்வாவி டத்தே செல்லாது என்னும் கருத்தின்கண் என் நெஞ்சம் உறுதிகொண்டது என்று, அந்த மெல்லிய இயல்பையுடைய  யாப்பியாயினி தன்னுள் நினைந்து, மகிழ்ச்சியுடைய தனது உசாஅத்துணைத் தோழியாகிய பதுமாபதிக்கு ஆடவர்க்குரிய நல்ல நலங்களெல்லாம் நிரம்பிய காதலன் இப்பெருந்தகை வேந்தனே யாதல்கண்டு மிகவும் சிறப்புற்றுக் குறைதலில்லாத நன்மையைத் தன்பாற் கொண்ட இந்த மொழியைத் தானே அவள்பாற் கொண்டு சென்று கூறுமோர் ஊக்கத்தோடு பெரிதும் விரும்பியவளாய் அத் திருமணக் கூட்டத்தின்கண் இனிதாக இராநிற்ப; என்க.
 
(விளக்கம்) காவலனாகிய பெருமகன் என்க. மாணகனாகிய பார்ப்பன உரு என்க. குடிப்பிறந்தார் நெஞ்சம் ஒப்புழியல்ல தோடாதென்பது ஒரு கொள்கை. இதனை,

              ''ஏகு நல்வழி யவ்வழி யென்மனம்
             ஆகு மோவதற் காகிய காரணம்
             பாகு போன்மொழிப் பைந்தொடி கன்னியே
             ஆகும் வேறிதற் கையுற வில்லையே''
(கம்ப. மிதிலை. 127.)

என்னும் இச்செய்யுளிடத்தும் காண்க. நன்னலத் தோன்றல் - நன்ன லத்திற்குரிய தோன்றல். அவட்கொண்டு - அவ்விடத்தேயுட் கொண்டு. உறைத்தலூற்றம் - உறைத்தற்குரிய ஊற்றம்.