பக்கம் எண் :

பக்கம் எண்:407

உரை
 
3. மகத காண்டம்
 
22. பதுமாபதி வதுவை
 
            ஆரா வன்பினொ டகன்ற வெழுநாள்
      110    ஏழாண் டமைந்தன தன்மைய ளாயினும்
            நலங்கவர்ந் தகன்ற நண்பனைக் கண்டனென்
            புலம்பினி யொழிக புனைவளைத் தோளி
            வளங்கெழு தானை வத்தவ னாமென
            விளங்கக் கூறும் விருப்பு நாணும்
      115    தேறிய தோழி யேறினள் சென்றுதன்
            துணைநலத் தோழிமுன் மணநலக் கோலமொடு
 
                       (இதுவுமது)
                 109 - 116 : ஆரா..........முன்
 
(பொழிப்புரை) ஆரா அன்பினோடு பதுமாபதியைக் காணாது கழிந்த அவ்வேழு நாளும் ஏழு ஆண்டுகள் கழிந்தாற்போல நெடியனவாகத் தோன்றும் தன்மையை உடையவளாகி இன்னும் அப்பதுமாபதியின் பெண்மைநலத்தை நுகர்ந்து அவற்றைக் கவர்ந்துகொண்டு பிரிந்த உன்னுடைய காதலனை யான் கண்கூடாகக்  கண்டேன். ஆதலால் இனி நீ துன்பம்விடுத்து ஆறுதல் எய்துவாயாக. ஒப்பனை செய்யப்பட்ட வளையலணிந்த தோளை யுடையோய் ! உன்னுடைய காதலனாகிய அம்மாணகன் யாரென விருக்கின்றாய் ? அவன் வளமிக்க படைகளையுடைய வத்தவ நாட்டு மன்னனாகிய உதயணனே காண் ! என்று அவட்கு விளங்கும்படி கூறுதற்கெழுந்த விருப்பமும் நாணும் உடையளாய், அப் பதுமாபதியைத் தேற்றுதற் பொருட்டு அச் சிவிகையின்கண் ஏறித் தன் துணைநலத் தோழியாகிய அப் பதுமாபதியின் மாளிகை முன்னர் இறங்கி, என்க.
 
(விளக்கம்) எழு நாள் - மணம் நிகழ்ந்ந ஏழு நாளும். பதுமாபதியைக் காணாது கழிந்தமையின் அந்நாட்கள் ஏழாண்டுகளாக அவளுக்குத் தோன்றின என்க. தன்மையளாய் + இனும் எனக் கண்ணழிவு செய்க. நண்பனைக் கண்டேன் - அவன் உதயணன் என்க. தேறிய -தேற்றுதற்கு. தோழி : யாப்பியாயினி.