பக்கம் எண் :

பக்கம் எண்:408

உரை
 
3. மகத காண்டம்
 
22. பதுமாபதி வதுவை
 
            துணைநலத் தோழிமுன் மணநலக் கோலமொடு
            நாணிநின் றோளைநின் பூணிள வனமுலை
            புல்லின துண்மையிற் புல்லேன் யானென
            மெல்லியன் மாதர் நகுமொழி பயிற்ற
 
                     (பதுமாபதி கூறல்)
               116 - 119 : மணநலம்.........பயிற்ற
 
(பொழிப்புரை) திருமணக் கோலமாகிய அழகோடு தன்னெதிர்  வந்து நாணத்தால் தலைகுனிந்து நின்றவளாகிய அந்த யாப்பியாயினியைக் கண்ட பதுமாபதி, அவளெதிரே ஆர்வத்தோடு சென்று ''ஏடி! அணிகலனணிந்த நின்னுடைய இளைய அழகிய முலைகள் நின் கணவனால் தழுவப்பட்டிருத்த லால் அவற்றை யான் தழுவிக்கொள்ளமாட்டேன்'' என்று மெல்லியல்பு வாய்ந்த அப்பதுமாபதி நகைமொழி கூறாநிற்ப; என்க.
 
(விளக்கம்) மணக்கோலம் நலம் என மாறுக. நின்றோள் : யாப்பியா யினி. புல்லினது - தழுவியது. மாதர் : பதுமாபதி. நகுமொழி - நகைச்சுவையு டைய மொழி. பயிற்ற - கூற.