பக்கம் எண் :

பக்கம் எண்:41

உரை
 
3. மகத காண்டம்
 
3. இராசகிரியம் புக்க
 
         
           சால்பெனக் கிடந்த கோலப் பெருநுகம்
           பொறைக்கழி கோத்துப் பூண்டன ராகி
           மறத்துறைப் பேரியாற்று மறுகரை போகி
     60    அறத்துறைப் பண்டி யசைவிலர் வாங்கி
           உயர்பெருங் கொற்றவ னுவப்பினுங் காயினும்
           தவிர்க்கவும் போக்கவும் படாத தன்மையர்
           நன்புலந் தழீஇய மன்பெருஞ் செய்கைக்
           காரணக் கிளவிப் பூரண நோக்கிற்
     65    பெருங்கடி யாள ரருங்கடிச் சேரி
           புறவிதழ் மருங்கிற் புல்லித ழாக
 
             (வேளாளர் தெரு)
       57-66 ; சால்பென .... புல்லிதழாக
 
(பொழிப்புரை) சான்றாண்மை என்று பாராட்டப்பட்டிருந்த
  அழகிய பெரிய நுகத்தடியின்கண் பொறுமை என்னும் கழியைக்கோத்து 
  அறத்தின் பகுதியாகிய வண்டியை மடுத்தவாய்தோறும் விடாதிழுக்கும்
  பகடுகளாய் நின்றிளைப்பின்றி யிழுத்துத் தீவினையென்னும்
  பெரியயாற்றினைக் கடந்து அதன் மறுகரையை எய்தித் தம்மை
  ஆள்கின்ற அரசன் தம்மை விரும்பினாலும் அல்லது சினந்தாலும் தம்
  நிலையினை மாற்றவோ அல்லது அகற்றவோ இயலாத
  தன்மையினையுடையராய் நல்ல நிலங்களைத் தழுவிய நிலைபெற்ற
  பெரிய தொழிலையும் காரணத்தையுடைய சொற்களையும் நிறைந்த
  கண்ணோட்டத்தையும் உடைய உலகிற்குப் பெரிய காவலாகிய
  வேளாளருடைய அரிய காவலமைந்த தெருக்கள் புறவிதழ்களை
  அடுத்து அகத்தேயுள்ள புல்லிதழ்களாகவும் என்க,
 
(விளக்கம்) சால்பு-பல குணங்களானும் நிறைதல்.
  நுகம்-நுகத்தடி. பொறைக்கழி - பண்புத்தொகை கழி - மூளை ;
  கயிறுமாம். மறத்துறைப் பேரியாறு-தீவினையாகிய துறையையுடைய
  பெரியயாறு. எருதுகளாகி இழுத்து என ஒருசொல் வருவித்தோதுக.
  அறத்தின் பகுதியாகிய வண்டி என்க. (57-60) இப்பகுதியோடு,
  ''கவற்சியிற் கையறனீக்கி முயற்சியிற், குண்டுதுறையிடுமணற் கோடுற
  வழுந்திய, பண்டிதுறையேற்றும் பகட்டிணைப்போல, இருவேமிவ்விடர்
  நீக்குதற் கியைந்தனம்'' எனவும் (1-53;52-5) '' மடுத்தவா யெல்லாம்
  பகடன்னா னுற்ற இடுக்க ணிடர்ப்பா டுடைத்து.'' (திருக்குறள் - 624.)
  எனவும், ''அச்சொடு தாக்கிப் பாருற்றியங்கிய, பண்டச் சாகாட்டாழ்ச்சி
  சொல்லிய, வரிமணன் ஞெமரக் கற்பக நடக்கும் பெருமிதப்
  பகட்டுக்குத் துறையுமுண்டோ''(புறநா-90.) எனவும், 'நிரம்பாத
  நீர்யாற்றிடு மணலுளாழ்ந்து பெரும்பார வாடவர்போற்
  பெய்பண்டந்தாங்கி மருங்கொற்றி மூக்கூன்றித் தாடவழ்ந்து வாங்கி,
  யுரங் கெட் டுறுப்பழுகிப் புல்லுண்ணாப் பொன்றும்''
  (சீவக .2784) எனவும் வரும் பகுதிகளை  ஒப்புக்காண்க. பூரண
  நோக்கு-கண்ணோட்டமைந்த பார்வை. நிறைந்த ஆராய்ச்சி
  யெனினுமாம். பெருங்கடியாளர் என்றது உலகிற்குப் பாதுகாவலாக 
  அமைந்தவேளாளரை.