உரை |
|
3. மகத காண்டம் |
|
22. பதுமாபதி வதுவை |
|
நின்னை வேட்ட வந்தண
னவற்குத்
துன்னிய தோழனது முன்னே கேட்டனன்
135 பெருமக னுள்ளத் துரிமை
பூண்டவென்
அதிரா நன்னிறை கதுவாய்ப்
படீஇத்
தணத்த றகுமோ நினைக்கெனக்
கலங்கித்
திருவிழை தெரியா டிட்பங் கூறப் |
|
(பதுமாபதி
கூறல்)
133 - 138 : நின்னை ......... கூற |
|
(பொழிப்புரை) ''யாப்பியாயினீ, உன்னைத் திருமணம் புணர்ந்த
இசைச்சன் என்னும் அப்பார்ப்பனன் உதயண குமரனுக்கு நெருங்கிய தோழன் என்னும்
இச்செய்தியை யான் முன்னரே கேள்வியுற்றேன். ஏடி! என்னுடைய உள்ளத்தின்கண் பிரியாது
உறைதற்கு உரிய காதலுரிமையை மேற்கொண்டுள்ள பெரியோனாகிய அம்மாணகன் என்னுடைய
கலங்காத நல்ல நிறையை வடுப்படுத்திவிட்டுப் பின்னர் என்னைப்பிரிந்து போதல்
அவ்வந்தணனுக்குத் தகுந்த செயலாகுமோ? இதனை நினைத்துப்பார்'' என்று மனங்கலங்கி அழகிய
அணிகலனணிந்த அப்பதுமாபதி நங்கை யாப்பியா யினியின் மொழியை நன்கு
அறிந்துகொள்ளாதவளாய்த் தன்னுடைய மனத்திட்பத்தையே கூறாநிற்ப;
என்க. |
|
(விளக்கம்) நின்னைவேட்ட அந்தணனென்றது இசைச்சனை. இதன்கண்
பதுமாபதி யாப்பியாயினியின் மொழிகளைக் கேட்டு வைத்தும், அவள் கூறிய பொருளைப் பிறழ
உணர்ந்து மறுமொழி கூறுதல் இயற்கைக்கு மிகவும் பொருந்துதல் காண்க. யாப்பியாயினி,
நின்னை நிறைகொண்ட பார்ப்பனன் உதயண குமரனே என்றாளாக அம்மொழிக்குப்
பதுமாபதி, ''என்னை மணந்த அப்பார்ப்பனன் உதயணனுக்குத் தோழன்'' என்று கூறினாளாகக்
கருதி அது முன்னே கேட்டனன் என்று மறுமொழி கூறுதல் உணர்க. காதலிற் கலங்கிய
பதுமாபதியின் நிலைமையினை இப்புலவர்பெரு மான் இத்துணை நுணுக்கமாகக் கூறுதல் நினைந்து
இன்புறுக : பெரு மகன் மாணகன். உள்ளத்து உரிமை பூண்ட பெருமகன் என்று மாறுக. அதிரா -
கலங்காத. தணத்தல் - பிரிதல். திருவிழை :
பதுமாபதி. |