பக்கம் எண் :

பக்கம் எண்:413

உரை
 
3. மகத காண்டம்
 
22. பதுமாபதி வதுவை
 
            நன்னுத னிலைமை யின்னதென் றுரைக்கவம்
            மாற்றங் கேட்டவட் டேற்றல் வேண்டி
            வத்தவர் பெருமகன் வண்ணங் கூட்டிச்
            சித்திரக் கிழிமிசை வித்தக மாக
      145    உண்கட் கிழமையுட் பண்பிற் றீராது
            மறைப்பியல் வழாஅக் குறிப்புமுத றொடங்கி
            ஆங்கப் பொழுதே பூங்குழை யுணர
            வாக்கமை பாவை வகைபெற வெழுதி
            வாணுதன் மாதரொடு மனைவயி னிருப்புழி
      150    உருவக் கோயிலு ளிரவுக் குறிவயின்
            வெருவக் குழறிய விழிகட் கூகைக்
            கடுங்குர லறியாள் கதுமென நடுங்கினள்
            ஒடுங்கீ ரோதி யென்பதை யுணர்த்தென
 
                     (உதயணன் செயல்)
              141 - 153 : அம் ......... உணர்த்தென
 
(பொழிப்புரை) அம்மொழியைக் கேட்ட உதயண மன்னன் அப்பதுமாபதி நங்கையை அக்கலக்கத்தினின்றும் தெளிவித்தலை விரும்பி அப்பொழுதே பல்வேறு வண்ணங்களையும் சேர்த்து வைத்துக்கொண்டு ஓர் ஓவியப்படா அத்தின்கண் தன்னுடைய ஓவியப்புலமை விளங்கும்படி காண்போர் நெஞ்சை உண்ணும் காதலுரிமையோடு தனக்குரிய மறப்பண்பி னும் குறைவுறாமல் மறைக்கும் தன்மையை வழுவாத தன் காதற்குறிப்பு முதலிய பண்புகளோடு தொடங்கி அதனைக் கண்ட அப்பொழுதே அழகிய  குழையினையுடைய அப்பதுமாபதி உணர்ந்து கொள்ளும்படி திருத்தமான ஓர் ஓவியத்தைத் தன்னைப்போன்று முறையாக வரைந்து யாப்பியாயினிக்குக் கொடுத்து, ''நங்காய் ! நீ இவ்வோவியத்தை அப்பதுமாபதிக்குக் கொடுத்துப் பின்னரும் யான் ஒளிபொருந்திய நெற்றியையுடைய அப்பதுமாபதி யோடு கன்னி மாடத்தின்கண் இருந்தகாலத்தே ஒருநாள் அழகிய அக்கன்னி மாடத்துச்சியின்கண் நள்ளிரவிலே வந்து கேட்போர் அஞ்சும்படி ஒரு கூகை குழறிற்றாக அது விழித்த கண்களையுடைய கூகையினது  கடியகுரல் என்பதனை அறியாதவளாய் அப் பதுமாபதி ஞெரேலென நடுங்கினள். இந்த நிகழ்ச்சியையும் அவளுக்குச் சொல்லித் தெளிவிப்பாயாக'' என்று கூறாநிற்ப; என்க.
 
(விளக்கம்) சித்திரக்கிழி - ஓவியம் எழுதுதற்குரிய துணி. உண்கண் - காண்போர் நெஞ்சத்தை உண்ணும் கண்என்க. பண்பு - தனக்குரிய மறப்பண்பு. அப்பொழுதே - கண்டபொழுதே. பூங்குழை : பதுமாபதி, வாக்கு - திருத்தம். மனை - கன்னிமாடம். உருவம் - அழகு. இரவுக்குறி - இரவுக்குறிக்குரிய நள்ளிரவு என்க. வெருவ - அஞ்ச. விழிகண் : வினைத்தொகை. கதுமென : விரைவுக் குறிப்பு. ஒடுங்கீரோதி : பதுமாபதி.