பக்கம் எண் :

பக்கம் எண்:414

உரை
 
3. மகத காண்டம்
 
22. பதுமாபதி வதுவை
 
            மன்னவ னுரைத்த மாற்றமு மன்னவன்
      155    தன்னொப் பாகிய தகைநலப் பாவையும்
            கொண்டனள் போகிக் கோமகட் குறுகி
            வண்டலர் படலை வத்தவன் வடிவிற்
            பாவை காட்டிப் பைங்கொடி யிதுநம்
            ஆய்பூங் காவி னந்தண வுருவொடு
      160    கரந்துநலங் கவர்ந்த காவலன் வடிவெனத்
 
                   (யாப்பியாயினி செயல்)
              154 - 160 ; மன்னவன்.........வடிவென
 
(பொழிப்புரை) அதுகேட்ட யாப்பியாயினி அவ்வுதயணன் கூறிய மொழியையும் அவன் வரைந்துதந்த அவனைப்போன்ற அழகிய நன்மையமைந்த ஓவியத்தையும் கொண்டு சென்று அக்கோமகளையணுகி வண்டுகள் மொய்க்கின்ற மலர்ந்த படலைமாலை அணிந்த உதயணகுமரனுடைய அவ்வோவியத்தைப் பதுமாபதிக்குக்  காட்டிப் ''பசிய பூங்கொடிபோல் வோய் ! இவ்வுருவம் நம்முடைய அழகிய பூம்பொழிலிலே பார்ப்பன வேடத்தோடு தன் உண்மையுருவத்தை மறைத்துக்கொண்டுவந்து உன்னு டைய பெண்மை நலம் முழுவதையும் கவர்ந்துகொண்டுபோன உதயண மன்னனுடைய உருவங்காண்!'' என்று உணர்த்தாநிற்ப ; என்க.
 
(விளக்கம்) மன்னவன் : உதயணன். மாற்றம் - மொழி, பாவை : ஓவியப் பாவை. கோமகள் : பதுமாபதி. படலை - தளிர் விரவித் தொடுத்த மாலை. அந்தணவுருவொடு - பார்ப்பன வடிவத்தோடு. காவலன் : உதயணன்.