பக்கம் எண் :

பக்கம் எண்:415

உரை
 
3. மகத காண்டம்
 
22. பதுமாபதி வதுவை
 
            திருந்திழை மாதர் திண்ணிதி னோக்கி
            இன்னுயிர்க் கிழவ னெழுதிய பாவை
            என்னும் வேற்றுமை யில்லை யாயினும்
            ஓராங் கிதனை யாராய்ந் தல்லது
      165    தீண்டலுந் தேறலுந் திருத்தகைத் தன்றெனப்
            பூண்டயங் கிளமுலைப் புனைவளைத் தோளி
            உள்ளே நினைஇக் கொள்ளா ளாக
 
                   (பதுமாபதி செயல்)
               161 - 167 : திருந்திழை.........ஆக
 
(பொழிப்புரை) அதுகேட்ட திருந்திய அணிகலன்களையுடைய அப்பதுமாபதி நங்கை அவ்வோவியப் பாவையைத் திட்பமாகப் பார்த்துத் தன் இன்னுயிர்க் காதலனாகிய அம்மாணகன் என்றும், இஃது எழுதப்பட்ட ஓவியம் என்றும் வேற்றுமை சிறிதும் இல்லையாகவும் யான் என் காதலன் வந்துழி அவனோடு இவ்வோவியத்தை வைத்து ஆராய்ந்து கண்டபினல்லது இதனைத் தொழுதலும் இவ்வுதயணனே அம்மாணகன். அம்மாணகன் ஓவியமே இஃதென்று தெளிந்து கோடலும் அழகுடைய செயல்க ளல்ல என்று அணிகலன் விளங்காநின்ற இள முலைகளையும் புனைந்த வளையலையுடைய தோள்களையுமுடைய அப்பதுமாபதி தன் நெஞ்சினுள்ளே நினைத்து அவ்வோவியத்தைக் கையேற்றுக் கொள்ளாளாக; என்க.
 
(விளக்கம்) திண்ணிதின் நோக்கி -கூர்ந்து நோக்கி. அப்பாவைக்கும் தன் கணவனுக்கும் ஒருசிறிதும் வேற்றுமையில்லையாகவும் என்க. கணவ னோடு ஓராங்குவைத்து ஆராய்ந்தல்லது என்க. தேறல் - தெளிதல். திருத்தகைத்தன்று : ஒருமை பன்மை மயக்கம்,  தயங்கு-விளங்காநின்ற. தோளி: பதுமாபதி. உள்ளே - நெஞ்சினுள். நினைஇ - நினைத்து