பக்கம் எண் :

பக்கம் எண்:417

உரை
 
3. மகத காண்டம்
 
22. பதுமாபதி வதுவை
 
            நீண்ட திண்டோ டீண்டுவன ணக்கு
            நெஞ்சங் கொண்ட நெடுமொழி யாள
            வஞ்ச வருவொடு வலைப்படுத் தனையெனப்
            புலவி நோக்கமொடு நலமொழி நயந்து
      180    கோமான் குறித்ததுந் தோழி கூற்றும்
            தானொருப் பட்ட தன்மைய ளாகிச்
            செல்லா நின்ற சின்னா ளெல்லை
 
                      (இதுவுமது)
              176 - 182 : நீண்ட.........எல்லை
 
(பொழிப்புரை) பின்னர், அவ் வோவியத்தைக் கண்முன் கொண்டு அவ்வோவியத்தினது நீண்ட திண்ணிய தோளைத் தன் விரலாலே தொட்டுச் சிரித்து, ''ஏடா! என்னுடைய மனங்கவர்ந்த புகழுடையோனே! நீ வஞ்ச உருவத்தோடு என்பால்வந்து என்னை நின்வலையில் அகப்படுத்திக்கொண்டாய் அல்லையோ !'' என்று கூறி ஊதிய பார்வையுடையவள் போல அவ்வோவியத்தைப் பார்த்து நலமுடைய மொழிகள் பலப்பல விரும்பிப் பேசி அவ்வுதயணன் சொல்லிவிடுத்த செய்திக்கும் அத்தோழி கூற்றிற்கும் தான் உடன்பட்டவளாகி ஒருசில நாள் கழிந்தபின்னர் ; என்க.
 
(விளக்கம்) தீண்டுவனள் - தீண்டி. நக்கு - சிரித்து. நெடுமொழி  - புகழ். கோமான் : உதயணன். தோழி : யாப்பியாயினி.