பக்கம் எண் :

பக்கம் எண்:419

உரை
 
3. மகத காண்டம்
 
22. பதுமாபதி வதுவை
 
            பெருமதி லணிந்த திருநகர் வரைப்பின்
            ஆய்ந்த கேள்வி மாந்தரு மகளிரும்
            ஆரா வுவகைய ராகிய காலைச்
      195    சேரார்க் கடந்த சேதியர் மகனையும்
            மதுநா றைம்பாற் பதுமா பதியையும்
            மரபிற் கொத்த மண்ணுவினை கழிப்பிய
            திருவிற் கொத்துத் தீதுபிற தீண்டா
            நெய்தலைப் பெய்து மையணி யுயர்நுதல்
      200    இருங்களிற் றியானை யெருத்திற் றந்த
            பெருந்த ணறுநீர் விரும்புவன ராட்டிப்
            பவழக் கொட்டைப் பொற்செருப் பேற்றித்
            திகழ்செய் கோலத் திருமணை யிரீஇச்
 
                      (இதுவுமது)
             192 - 203 : பெருமதில் ......... இரீஇ
 
(பொழிப்புரை) பெரிய மதில்களை அணிசெய்யப்பட்ட அவ்வழகிய இராசகிரிய நகரத்தின்கண் வாழாநின்ற கற்றுக் கேட்டு ஆராய்ந்து உணர்ந்த ஆடவரும் பெண்டிரும் பெருமகிழ்ச்சியுடையவர் ஆகிய பொழுது, பகைவரை வென்று கடந்த சேதி நாட்டரசனாகிய உதயணகுமரனையும் தேன்மணங்கமழும் கூந்தலையுடைய பதுமாபதி நங்கையையும் தம் முன்னோர் மரபிற்குப் பொருந்துமாறு திருமுழுக்குச் சடங்கு செய்து கழிப்பதற்குத் தொடங்கிச் செல்வத்திற்கு மிகவும் பொருந்திப் பிறதீமைகள் தீண்டமாட்டாமைக்குக் காரணமான நறுநெய்யைப் பதுமாபதியின் தலையிலே பெய்து அஞ்சனந் தீட்டப்பட்ட உயர்ந்த நுதலையுடைய பெரிய களிற்றியானையின் பிடரியிலே ஏற்றிக் கொணர்ந்த பெரிய குளிர்ந்த நறிய நீரால் விரும்பித் திருமுழுக்குச் செய்வித்துப் பவழத்தாலாகிய கொட்டையையுடைய பொன்னாலியன்ற மிதியடியின் மேலேறுவித்து அழைத்துக் கொணர்ந்து விளங்குகின்ற ஒப்பனையையுடைய அழகிய மணைப்பலகை யின்கண் இருக்கச் செய்து; என்க.
 
(விளக்கம்) மதிலணிந்த மாந்தரும் மகளிரும் என்க. மாந்தர் - ஈண்டுப் பெண்ணொழித்து நின்றது. சேரார் - பகைவர். சேதியர் மகன் - உதய ணன். மது - தேன். மரபு - பழைய முறை. மண்ணுவினை - ஒரு சடங்கு; திரு முழுக்குச்சடங்கு. கழிப்பிய - கழித்தற்கு. நெய்தலைப் பெய்தல் - ஒரு சடங்கு. கொட்டை - குமிழ். பொற்செருப்பு - பொன்னாலியன்ற மிதியடி, கோலத்திருமணை - ஒப்பனை செய்தற்குரிய அழகிய மணைப்பலகை. இரீஇ - இருத்தி.