பக்கம் எண் :

பக்கம் எண்:420

உரை
 
3. மகத காண்டம்
 
22. பதுமாபதி வதுவை
 
            செங்கயற் கண்ணியை நங்கை தவ்வையர்
      205    கோல மீத்தக வாலணி கொளீஇத்
            திருந்தடி வணங்கி வருந்த லோம்பிப்
            பீடத் திரீஇய பாடறிந் தேற்றி
            நறுநீர்த் துவர்க்கை வயின்வயி னுரீஇக்
            கறைமாண் காழகிற் கொழும்புகை கொளீஇ
      210    நெறித்து நெறிப்பட வாருநர் முடித்து
            மங்கல நறுஞ்சூட்டு மரபி னணிந்து
 
            (பதுமாபதியைக் கோலஞ் செய்தல்)
             204 - 211 : செங்கயல்.........அணிந்து
 
(பொழிப்புரை) சிவந்த கயல்மீன் போன்ற கண்களையுடைய பதுமாபதியை அவளுடைய தவ்வைமார் அழகு மேம்பாடுறும் பொருட்டுத் தூய அணிகலன்களைப் பூட்டித் திருந்திய அப்பெருமாட்டியின் திருவடி களை வணங்கி அவ்வடிகள் வருந்தாத படி பாதுகாத்து அழைத்துக் கொணர்ந்து, பீடத்தின்கண் இருத்துதற்கு இடமறிந்து ஏற்றிப் பத்துவ கைத் துவரும் ஊறவைத்த நறிய நீரைக்கூந்தல் நிறம் பெறற் பொருட்டு அக்கூந்தலின்கண் இடந்தொறும் இடந்தொறும் தெளித்து உருவிக் கரு மையால் மாண்புடைய முதிர்ந்த அகிற்கட்டையிட்டு எழுப்பிய கொழுவிய நறுமணப் புகையை ஊட்டி நெறிப்புண்டாக நெறித்துச் சிக்கறச் சீப்பான் வாரி முடித்து மகளிர்க்கு மங்கலமாகிய நறிய முல்லைச் சூட்டினை முறை யாக அக்கூந்தலிலணிந்து; என்க.
 
(விளக்கம்) கன்னி : பதுமாபதி. நங்கை - அவள் என்பது பட நின்றது. தவ்வையர் - தமக்கைமார். ஈண்டு பதுமாபதியின் தோழிமாருள்  வைத்து அவளுக்கு மூத்த தோழிமாரை உணர்த்தி நின்றது. வாலணி - தூய அணிக லன். இரீஇய - இருத்துதற்கு. பாடு - இடம். நறு நீர்த்துவர் - துவர் நறு நீர் என மாறுக. துவர் பத்து. அவையாவன : ''பூவந்தி திரிபலை புணர்கருங்காலி நாவலோடு நாற்பான் மரமே'' (சிலப் 6 : 76) என்பன. கைவயின் உரீஇ - கையாலள்ளிக் கூந்தலின்கண் இடந்தொறும் பெய்து உருவி என்க. உரீஇ - உருவி. கறை மாண்காழகில் - கரிய மாட்சிமையுடைய முதிர்ந்த அகிற்கட்டை, வாருநர் - சீப்பால் வாரி. மங்கலநறுஞ்சூட்டு - மங்கலமா கிய நறிய முல்லை மலராலியன்ற கொண்டைமாலை இது கற்பிற்கு அறிகுறி.