பக்கம் எண் :

பக்கம் எண்:422

உரை
 
3. மகத காண்டம்
 
22. பதுமாபதி வதுவை
 
            திருக்கேழ்க் களிகை செவ்வனஞ் சேர்த்திப்
            பைம்பொற் றிலகமொடு பட்ட மணிந்த
            ஒண்கதிர் மதிமுக மொளியொடு சுடரச்
      225    செம்பொ னோலை சேடுபடச் சுருக்கி
            ஐவகை வண்ணத் தந்நுண் மேகலை
            பையர வல்குற் பரப்பிடை யிமைப்பக்
            கொய்துகொண் டுடீஇய கோடி நுண்டுகில்
            மைவளர் கண்ணி மருங்குல் வருத்தக்
      230    கடுங்கதிர் முத்துங் கைபுனை மலரும்
            தடந்தோட் கொப்ப வுடங்கணிந் தொழுகிய
 
                     (இதுவுமது)
              222 - 231 : திரு.........அணிந்து
 
(பொழிப்புரை) அழகிய நிறமுடைய கழுத்தணியைச் செவ்வையாகப் பூட்டிப் பசிய பொற்றிலகத்தோடு நெற்றிப் பட்ட மணிந்த ஒள்ளிய கதிரையு டைய திங்கள் போன்ற திருமுகம் மேலும் ஒளியோடு விளங்கும் படி செம்பொன்னாலாகிய ஓலையை அழகுண்டாகச் சுருக்கி அணிந்து பச்சை சிவப்பு நீலம் கருப்புப் பொன்னிறம் ஆகிய ஐந்து வண்ணங்களையு டைய அழகிய நுண்ணிய மேகலையணியைப் பாம்பின் படத்தை யொத்த அல்குலின்மேற்கிடந்து விளங்கும்படி யணிந்து புதிய நுண்ணிய ஆடை யைக் கொய்சகமிட்டு அழகுற உடுத்தி, மைதீட்டிய கண்ணையுடைய அப்பதுமாபதியின் இடை வருந்தும்படி பேரொளியையுடைய முத்துமாலைகளையும் அழகாகப் புனையப்பட்ட மலர்மாலைகளையும் அப்பெருமாட்டியின்பெரிய தோள்களுக்குப் பொருந்தும்படி ஒரு சேர அணிந்து; என்க.
 
(விளக்கம்) திருக்கேழ் - அழகிய நிறம். களிகை - கழுத்தணி. பட்டம் - நெற்றிப்பட்டம். ஓலை - பனையோலையின் வடிவிற் செய்யப்பட்ட ஒரு பொன்னணிகலம். சேடு - அழகு. சுருக்கி - சுருள் செய்து. மேகலை - ஓரணிகலம். புதிய துகில் மருங்குலை வருத்த என்க. கடுங்கதிர் - பேரொளி. உடங்கு - ஒரு சேர.