பக்கம் எண் :

பக்கம் எண்:423

உரை
 
3. மகத காண்டம்
 
22. பதுமாபதி வதுவை
 
            தடந்தோட் கொப்ப வுடங்கணிந் தொழுகிய
            சின்மயிர் முன்கைப் பொன்வளை முதலாக்
            கண்ணார் கடகமொடு கைபுனைந் தியற்றிய
            சூடகத் தேற்ற சுடரொளிப் பவளமொடு
      235    பாடக நூபுரம் பரட்டுமிசை யரற்ற
            ஆடமைத் தோளியை யணிந்துமுறை பிறழாது
            வதுவைக் கேற்ற மங்கலப் பேரணி
            அதிநா கரிகியை யணிந்தன ரமைய
 
                     (இதுவுமது)
             231 - 238 : ஒழுகிய.........அமைய
 
(பொழிப்புரை) ஒழுங்குபட்ட சிலவாகிய மயிரையுடைய முன்கையின்கண் பொன்வளை முதலாகக் கண்ணிறைந்த அழகுடைய கடகம் ஈறாக உள்ள அணிகளையும், சூடகம் என்னும் வளையலோடு அணிந்து மேற்கொண்ட பேரொளியையுடைய பவள வளையலையுமணிந்து, பாடகம் நூபுரம் என்னும் காலணிகள் பரட்டின்மேற்கிடந்து ஆரவாரியா நிற்ப, ஆடாநின்ற மூங்கில் போன்ற தோளையுடைய அப்பதுமாபதியை ஒப்பனை செய்து முன்னோர்முறையினின்றும் பிறழாமல் மிக்க நாகரிகத்தையுடைய அக் கோமக ளைத் திருமணவினைக் கேற்ற மங்கலப்பேரணிகளாலே இவ்வாறு அணிந்து விடா நிற்ப என்க.
 
(விளக்கம்) ஒழுகிய-ஒழுங்குபட்ட. கடகம்-ஒரு கையணிகலம். பாடகம், நூபுரம் என்பன காலணிகலன்கள்.