பக்கம் எண் :

பக்கம் எண்:427

உரை
 
3. மகத காண்டம்
 
22. பதுமாபதி வதுவை
 
            புதுமலர்க் கோதைப் பூந்தொடிப் பணைத்தோட்
            பதுமா நங்கையைப் பண்புணப் பேணி
            மணநல மகளிர் மரபிற் கொத்தவை
            துணைநல மகளிரொடு துன்னிய காதல்
      270   மூதறி மகளிர் முடித்த பின்றை
 
                      (இதுவுமது)
               266 - 270 : புது.........பின்றை
 
(பொழிப்புரை) புதிய மலர்மாலையையும் பொலிவுடைய தொடியினையும் பருத்த தோளையுமுடைய பதுமாபதி நங்கையைப் பழைமையை யறிந்த மங்கலமகளிர் பண்போடு பேணித்தம் மரபிற்குப் பொருந்திய செயல்களைத் தமக்குத் துணையாகிய அழகிய மகளிரொடும் செறிந்த காதலோடும் செய்து முடித்த பின்னர், என்க.
 
(விளக்கம்) பண்பு உணப்பேணி - அவளுடைய நற்பண்பு தம் நெஞ்சத்தைப் பருகும்படி பேணி என்க. மணநலமகளிர் - மங்கல மகளிர். மூதறி மகளிர்-பழைய வழக்கங்களை யுணர்ந்த மகளிர்கள்.