பக்கம் எண் :

பக்கம் எண்:429

உரை
 
3. மகத காண்டம்
 
22. பதுமாபதி வதுவை
 
            ஒருமைக் கொத்த வொன்றுபுரி யொழுக்கின்
            வல்லோர் வகுத்த வண்ணக் கைவினைப்
      280    பல்பூம் பட்டிற் பரூஉத்திரட் டிருமணிக்
            காலொடு பொலிந்த கோலக் கட்டிற்
            கடிநாட் செல்வத்துக் காவிதி மாக்கள்
            படியிற் றிரியாது படுத்தனர் வணங்கப்
            பட்டச் சின்னுதற் பதுமா பதியொடு
      285    கட்டிலே றினனாற் கருதியது முடித்தென்.
 
                      (இதுவுமது)
              278 - 285 : ஒருமை.........முடித்தென்
 
(பொழிப்புரை) நெஞ்சொருமையுற்று இருவரும் அறம் ஒன்றனையே விரும்புதற்குக் காரணமான ஒழுக்கத்தோடு தொழில் வல்லவர் இயற்றிய வண்ணங்களையுடைய தொழிற் சிறப்புடைய பல்வேறு நிறமுடைய பட்டினையுடைய பருத்துத்திரண்ட அழகிய மணிகள் பதித்த கால்களோடே பொலிவுற்ற கட்டிலின் கண் அத்திருமணநாளின்கண் செல்வமிக்க குடிப்பிறந்த காவிதிப்பட்டம் பெற்ற மகளிர் முறைமையில் பிறழாமல் மலர் முதலியவற்றைப் பரப்பிவைத்து வணங்காநிற்ப அவ்வுதயணகுமரன் பட்டம் கட்டப்பெற்ற சிறிய நுதலையுடைய அப்பதுமாபதி நங்கையோடு தான் கருதிவந்த காரியத்தை முடித்தவனாய்அக்கட்டிலின்கண் ஏறினன் என்க.
 
(விளக்கம்) அன்பாலே தலைவன் தலைவியர் இருவரும் ஒருமையுற்று இயற்றும் இன்ப வாழ்க்கைக்குப் பொருந்தியதும் அறத்தையே விரும்பும் ஒழுக்கத்தையும் உடைய காவிதிமாக்கள் என்க. காவிதிமாக்கள் - காவிதிப்பட்டம் பெற்ற மகளிர். படுத்தனர் - மலர் முதலியவற்றைப் பரப்பினர்.

               22. பதுமாபதி வதுவை முற்றிற்று.