பக்கம் எண் :

பக்கம் எண்:430

உரை
 
3. மகத காண்டம்
 
23. படையெழுச்சி
 
          கட்டி லேறிய காவல் வேந்தன்
          ஒட்டிய நண்பி னுருமண் ணுவாவினை
          விடுத்தல் வேண்டும் வல்லே விரைந்தெனத்
          தடுத்த பெரும்புகழ்த் தருசகற் குணர்த்தித்
     5    தெய்வமும் விழையு மைதவழ் கோயிலுள்
          ஆடல் கண்டும் பாடல் கேட்டும்
          மிசையுல கெய்திய வசைவி லூக்கத்
          தண்ண னெடுமுடி யமரிறை போலப்
          பண்ணொலி யரவத் துண்மகிழ் வெய்திக்
     10    கழுமிய காதலொடு கவவுக் கைவிடா
          தொழுகுங் காலை நிகழ்பொருள் கூறுவேன
 
                    (உதயணன் செயல்)
                1 - 11 : கட்டில்.........கூறுவேன்
 
(பொழிப்புரை) இவ்வாறு பதுமாபதியை மணந்து கொண்டு கட்டிலேறிய காவலனாகிய உதயணன், பெரும்புகழ் பிறரிடம் செல்லாவண்ணம் தடுத்துத் தனதாக்கிக்கொண்ட தருசக மன்னனை நோக்கி, ''வேந்தே ! நம் உள்ளத்தோடு ஒட்டிய நண்பினையுடைய உருமண்ணுவாவை மிக விரைந்து பகைவரிடத்தினின்றும் விடுவித்தல் வேண்டும்'' என்று அறிவுறுத்திப் பின்னர்த் தெய்வங்களும் விரும்புவதற்குக் காரணமான முகில்கள் தவழாநின்ற அரண்மனையினுள்ளே கூத்தாடுதலைக் கண்டும், பாடுதலைக்கேட்டும் மேனிலையுலகத்தையடைந்த தளராத ஊக்கத்தையுடைய தலைவனாகிய நீண்ட முடியையுடைய தேவேந்திரனைப்போலப் பண்பாடும் ஒலியினாலே நெஞ்சு மகிழ்ந்து தன் காதலியாகிய பதுமாபதியின்பால் நிறைந்த காதலுடையனாய் அவளைத் தழுவிய கைநெகிழாதவனாய், ஒழுகாநின்ற காலத்தில் நிகழ்ந்த காரியங்களை யான் இனிக் கூறுவேன் கேண்மின்; என்க.
 
(விளக்கம்) காவல் வேந்தன் : உதயணன். வல்லே விரைந்து - மிகவும் விரைந்து. தடுத்த பெரும்புகழ்த் தருசகன் - பெரிய புகழ் காவல் வேந்தன் : உதயணன். வல்லே விரைந்து - மிகவும் விரைந்து. தடுத்த பெரும்புகழ்த் தருசகன் - பெரிய புகழ் பிறரிடத்துச் செல்லாமல் தன்பாலே தடுத்து நிறுத்திக்கொண்ட தருசகன். ஆடல் - கூத்தாட்டம். மிசையுலகு - தேவருலகு. அமரிறை - அமரர்இறை ; தேவேந்திரன். கழுமிய - நிறைந்த. கவவுக்கை - அணைத்தகை. 'நிகழ் பொருள் கூறுவேன்' என்றது நூலாசிரியர் நம்மனோர்க்கு அறிவித்த படியாம்.