பக்கம் எண் :

பக்கம் எண்:431

உரை
 
3. மகத காண்டம்
 
23. படையெழுச்சி
 
          தம்முறு கருமந் தாஞ்சேர்ந் ததுவெனப்
          பின்னிது முடித்தல் பெருமை யன்றால்
          முன்னுப காரத்து நன்ன ராற்றிய
     15    நட்பு மன்றி நம்மொடு கலந்த
          சுற்ற மாதலிற் சுடர்ப்பூ ணுதயணன்
          அற்ற மெல்லா மறிந்தன மாகிக்
          கொற்றநன் னாடு கொண்டனங் கொடுத்தல்
          கடனமக் கதுவென விடனுறு சூழ்ச்சியன்
 
                  (தருசகன் எண்ணுதல்)
               12 - 19 : தம்முறு.........சூழ்ச்சியன்
 
(பொழிப்புரை) தருசக மன்னன் தன் பேரமைச்சர்களை நோக்கி, ''பெரியீர்! நமக்கு இன்றியமையாத காரியம் நாம் முயலாது வைத்தும் தானே முடிந்தது. இதனால் நாம் மகிழ்ச்சியுற்று வாளாவிருத்தல் தகுதியன்று; உதயண மன்னன் நாம் செய்யாமல் தானே முற்பட்டு நமக்குச்செய்த உபகாரமாகிய நன்றியையேயன்றி அவன் நம்மொடு கொண்டுள்ள நட்பேயுமன்றி நம்மொடு நெருங்கிய உறவினனும் ஆகிவிட்டான். மேலும், அம்மன்னனுக்கு உள்ள சோர்வுகளெல்லாம் அறிந்துகொண்ட நமக்கு அவனுடைய வெற்றியுடைய நல்ல நாட்டினை அவன் பகைவன் பானின்றும், மீட்டு அப்பெருமகன்பால் கொடுப்பது நமக்குத் தீராக் கடமையாகும். இக் கடமையை ஆற்றவும் காலம் போக்கிச் செய்தல் நமக்குப் பெருமையாகாது'' என்று விரிந்த ஆராய்ச்சியையுடையனாய்; என்க.
 
(விளக்கம்) முன்னுபகாரம் என்றது உதயணன் சங்க மன்னரை வென்றதனை. நன்னர் - நன்றி. நம்மொடு கலந்த சுற்றம் என்றது உதயணன் தனக்கு மைத்துனனாகியதனை. அற்றம் - சோர்வு. பகைவர்பால் நாடுகொண்டு கொடுத்தல் கடன். இடனுறு சூழ்ச்சி - விரிந்த ஆராய்ச்சி.