பக்கம் எண் :

பக்கம் எண்:432

உரை
 
3. மகத காண்டம்
 
23. படையெழுச்சி
 
         
     20    தாமே சென்று தம்வினை முடிக்கும்
           மாமாத் தியருண் மதிமீக் கூறிய
           பகைப்புலந் தேய்க்கும் படைத்திறற் றடக்கை
           வகைப்பொலி மான்றேர் வருட காரனும்
           வீர வென்றி விறல்வெந் துப்பிற்
     25    றாரணி மார்பிற் றார காரியும்
           செருமிகு சேனைச் செய்தொழி னவின்ற
           பொருமா ணூக்கத்துத் தரும தத்தனும்
           பத்திப் பைம்பூட் சத்திய காயனொடு
           வேல்வருந் தானை நால்வரு முதலா
 
             (தருசகன் உதயணனுடன் அமைச்சர் 
                  முதலியோரை விடுத்தல்)
                 20 - 29 : தாமே........முதலா
 
(பொழிப்புரை) அரசன் ஏவாமல் தாமே சென்று தமக்குரிய கடமைகளைச் செய்துமுடிக்கும் அமைச்சர்களுள் வைத்து அறிவினாற் புகழப்பட்ட தன் பகைவரை அழிக்கும் படை வலிமையையுடைய பெரிய கையினையும் பல்வகையானும் பொலிவுற்ற குதிரை பூட்டிய தேரையும் உடையவனாகிய 'வருடகாரன்' என்னும் அமைச்சனும் தன் வீரத்தாலே எய்திய வெற்றியினையும் அவ்வெற்றிக்குத்தக்க வெவ்விய வலியினையும் வாகைமாலை யணியப்பட்ட மார்பினையுமுடைய 'தாரகாரி' என்னும் அமைச்சனும், போரின்கண் மிக்குச் செல்லும் படைகளையும் போர்செய்யும் தொழிற் பயிற்சியையும் போர்செய்த வன்கண் மாட்சிமையுடைய ஊக்கத்தினையும் உடைய 'தருமதத்தன்' என்னும் அமைச்சனும் நிரலாகப் பசிய வீரக்கழல்கட்டிய 'சத்தியகாயன்' என்னும் அமைச்சனும் ஆகிய வேலோடு வருகின்ற படைகளையுடைய இந்நால்வரையும் தலைமையாகக்கொண்டு; என்க.
 
(விளக்கம்) மாமாத்தியர் - பேரமைச்சர். பகைப்புலம் - பகைவர். மான்றேர் - குதிரை பூட்டிய தேர். நவின்ற - பயின்ற. பத்திப்பைம்பூண் - நிரல்படக் கட்டிய பசிய வீரக்கழல். வேலோடு வருந்தானை என்க. முதலா - முதல்வராக.