உரை |
|
3. மகத காண்டம் |
|
24. மேல்வீழ் வலித்தது |
|
இருளிடை
யெழுந்த விகலடு பெரும்படை
அருளுடை வேந்தன் வழிதொடர்ந்
தொழியான் வான்றோய்
பெரும்புகழ் வத்தவ
ரிறைவற்குத் தேன்றோய்த்
தன்ன திருமொழி யளைஇ 5 இடையற
வில்லா வின்பமொ டுயர்ந்த
நன்குடைக் கேள்விமுத னின்கட்
டோன்றிய கலக்கமி
னிலைமையுங் கைம்மா
றில்லதோர் கிளைப்பெருந்
தொடர்ச்சியும் பயந்தவின் றெமக்கென
அற்புத்தளைக் கிளவி பற்பல
பயிற்றிப் |
|
(உதயணனுக்குத்
தருசகன் விடை
கொடுத்தல்)
1 - 9 : இருளிடை ......... பயிற்றி
|
|
(பொழிப்புரை) இவ்வாறு நள்ளிரவிலே இருளின்கண் எழுந்த போர் வெல்லும்
தனது பெரும் படையை அருளுடை வேந்தனாகிய அத்தருசகன், வழிதொடர்ந்து நெடுந்தொலைவு
வந்தும், மீளானாய் வானுலகத்தே சென்று பரவும் பெரும்புகழையுடைய வத்தவ மன்னனுக்குத்
தேனில் தோய்த்தாற் போன்று தித்திக்கும் அழகிய மொழிகளால் அளவளாவி யான்
நின்பாற் பயின்ற இடையறவில்லாத இன்பத்தோடு உயர்ந்த நன்மையுடைய நூற் கேள்விகள்
எனக்கு நின்பாலுண்டான கலங்காத நிலைமையினையும் கைம்மாறில்லாததோர் உறவுப் பெருந்
தொடர்ச்சியையும் இன்று எமக்கு வழங்கின என்று அன்பாலே கேட்போரைப் பிணிக்கும்
மொழிகள் பலவற்றைப் பலகாலும் கூறி ; என்க.
|
|
(விளக்கம்) இகல்-போர். வேந்தன் : தருசகன். நின்பாற்
பயின்ற கேள்வி என்க. கேள்வி முதல் - கேள்வியாகிய முதல். கிளைபெருந் தொடர்ச்சி -
உறவு முறையாகிய பெருந் தொடர்பு. பயிற்றி - பல காலுஞ்
சொல்லி.
|