பக்கம் எண் :

பக்கம் எண்:439

உரை
 
3. மகத காண்டம்
 
24. மேல்வீழ் வலித்தது
 
         
     10    பீடுகெழு தானைப் பிரச்சோ தனற்குக்
           கூடிய கிளைமைக் குணம்பல கூறி
           ஓடுகா லிளையரை யோலையொடு போக்கின்
           நாடுவ தல்ல தவனு நம்மொடு
           தீது வேண்டா நிலைமைய னாகும்
     15    மலைத்தலைத் தொடுத்த மல்லற் பேரியாற்றுத்
           தலைபெயன் மாரியிற் றவிர்த லின்றி
           நிலைக்களந் தோறுங் கொலைப்படை விடுத்தபின்
           யானும் வேண்டின் வருகுவ னேனைச்
 
                    (இதுவுமது)
              10 - 18 : பீடு ......... வருகுவன்
 
(பொழிப்புரை) பின்னரும், பெருமை பொருந்திய படைகளையுடைய பிரச்சோதன மன்னனுக்கு நம்முள் பொருந்திய உறவுப் பண்புகள் பலவற்றையும் எடுத்துச் சொல்லி விரைந்து செல்லும் காலையுடைய இளந்தூதுவரை நம்முடைய ஓலையோடு அவன் பால் செலுத்தின் அம்மன்னன்றானும், நம்முடைய ஆக்கத்தையே விரும்புவதல்லாமல் நமக்குத் தீதுண்டாக விரும்பாத தன்மையையுடையன் ஆதல் ஒருதலை. மலையினது உச்சியிற்றொடங்கிக் கடலை நோக்கி ஒழுகும் வளம் பொருந்திய பேரியாற்றின்கண் கார்ப்பருவத்தின் தொடக்கத்தே பெய்யும் மழையினால் பெருகும் வெள்ளம் போன்று, நம் கொலைப் படைகளை யான் வெற்றி நிலைத்தற்குக் காரணமான போர்க்களந்தோறும் தாழாமல் செலுத்திய பின்னர் அப்பிரச்சோதன மன்னனை, யானும் வேண்டிக் கொள்வேனாயின், அவனும் ஒரு தலையாக நமக்கு உதவி செய்ய வருகுவன்; என்க.
 
(விளக்கம்) பீடு - பெருமை. கிளைமைக் குணம் - உறவுத் தன்மை. இளையர் - இளந்தூதர். நாடுவதல்லது - விரும்புவதல்லாமல். அவனும்: பிரச்சோதனனும். தொடுத்த - தொடங்கிய. தலைப்பெயல் - கார்ப்பருவத் தொடக்கத்தே பெய்யும் மழை. நிலைக்களம் - வெற்றி நிலைத்தற்குக் காரணமான போர்க்களம்.