பக்கம் எண்:44
|
|
உரை | | 3. மகத காண்டம் | | 3. இராசகிரியம் புக்க | | இருநில வரைப்பி னெதிர்ப்போ ரின்றி
அருநிலை யுலகி னாட்சி விறப்பினும்
90 பெரும்படைக் கொற்றம் பீடழிந்து சுருங்கா
அரும்படை மன்ன ராற்றலி னெருங்கத்
தலைமையின் வழீஇய நிலைமை யெய்தினும்
உற்றது முடிக்கு முறுதி நாட்டத்துக்
கற்றுப்பொரு டெரிந்த கண்போற் காட்சி
95 அருமதி யமைச்சர் திருமதிற் சேரி
மாசில் பைந்தாது சுமந்த மத்தகத்
தாசில் பன்மல ரல்லி யாகச் | | (அமைச்சர் தெரு)
88 - 97 : இருநில,,,,,,,,,அல்லியாக | | (பொழிப்புரை) பெரிய இந்த நிலத்தின்கண்ணே அரசன் தன்னை எதிர்க்கும் பகைவர் இன்றித் தன் ஆட்சியிற் பெருகியவிடத்தும், அன்றித் தனது பெரிய படைகள் தம் வெற்றியும் பெருமையுங் குன்ற வெல்லுதற்கரிய படையையுடைய பகைமன்னர் தமது ஆற்றல் மிகுதியானே போர் மேற்கெரண்டு நெருங்குதலானே தனது அரசுரிமையின் வழுவிய நிலைமையை எய்தியவிடத்தும், தமக்குரிய கடமையைச் செய்து முடித்தற்குக் காரணமான திண்ணிய நோக்கத்தையும் தாம் நன்கு கற்றுப் பொருளையும் ஆராய்ந்துணர்ந்து அரசனுக்குக் கண்போன்ற மெய்க்காட்சியினையும், உடைய பெறுதற்கரிய அறிவினையும் உடைய அமைச்சருடைய அழகிய மதிலாற் குழப்பட்ட தெருக்கள் குற்றமற்ற பசிய தாதுக்களையுடைய பொகுட்டைச் சூழ்ந்துள்ள குற்றமற்ற பலவாகிய மலர்ந்துள்ள அல்லியிதழாகவும் என்க, | | (விளக்கம்) அரசன் உலகடைய வென்று பகைவரின்றி இறுமாந்திருக்கும் போதும், அல்லது அவன் கெடுநிலை எய்திய போதும் என்னும் இருநிலையினும் தங்கள் கடமையைச் செய்து அவனுக்கு உறுதி செய்யும் அமைச்சர் என்றவாறு, இப்பகுதியோடு,
''உற்றது கொண்டு மேல்வந் துறுபொரு ளுணருங் கோளார்
மற்றது வினையின் வந்த தாயினும் மாற்றலாற்றும்
பெற்றியர் பிறப்பின் மேன்மைப் பெரியவர் அரிய நூலுங்
கற்றவர் மான நோக்கிற் கவரிமா வனைய நீரார்'
எனவும்
'காலமு மிடனு மேற்ற கருவியுந் தெரியக் கற்ற
நூலுற நோக்கித் தெய்வ நுனித்தறங் குணித்த மேலோர்
சீலமும் புகழ்க்கு வேண்டுஞ் செய்கையுந் தெரிந்து கொண்டு
பால்வரு முறுதி யாவுந் தலைவற்குப் பயக்கு நீரார்'
எனவும்,
'தம்முயிர்க் குறுதி யெண்ணார் தலைமகன் வெகுண்ட போதும்
வெம்மையைத் தாங்கி நீதி விடாதுநின் றுரைக்கும் வீரர்
செம்மையிற் றிறம்பல் செல்லாத் தேற்றத்தார் தெரியுங் காலம்
மும்மையு முணர வல்லார் ஒருமையே மொழியு நீரார்'
எனவும் வரும் கம்பநாடர் செய்யுட்கள் (மந்திரப். 7-9) நினையற்பாலன.
விறப்பினும் பெருகினும். சுருங்கா-சுருங்கி. இதனை செயவெ னெச்சமாக்கி ஏது வாக்குக. அரசனுக்குக் கண்போல் என்க. மத்தகம் என்றது தாமரைப் பொகுட்டினை, ஈண்டு அல்லி என்றது, பொகுட்டைச் சூழ்ந்து பொற்கம்பி போன்று செறிந்துள்ள நுண்ணிதழ்களை, |
|
|