பக்கம் எண் :

பக்கம் எண்:440

உரை
 
3. மகத காண்டம்
 
24. மேல்வீழ் வலித்தது
 
           யானும் வேண்டின் வருகுவ னேனைச்
           சேணில மன்னர் கேண்மை யுடையோர்க்
     20    கறியப் போக்கி னவர்களும் வருவர்
           செறியச் செய்த குறியினி ராமின்
           நிலம்படக் கிடந்தநின் னேமியந் தடக்கை
           வலம்படு வினைய வாகெனப் பல்லூழ்
           பொய்யா வாய்ப்புண் மெய்பெறக் கிளந்து
     25    திருவள ரகல மிருவருந் தழீஇப்
           பிரிய லுற்ற தரிசகற் குரைக்கும்
 
                     (இதுவுமது)
           18 - 26 : ஏனை ......... உரைக்கும்
 
(பொழிப்புரை) இன்னும் நம்பால் நட்புடைய தூரத்திலுள்ள மன்னர்கட்கும் இச்செய்தியையுணர்த்தத் தூதுவரை விடுவேமாயின், அவர்தாமும் நமக்குத் துணையாக வருவர். இனி நீயும் நம் படைத்தலைவரும் பிறர் அறியாதபடி நுமக்குள் செய்து கொண்ட சங்கேத மொழிகளையுடையீராக ஆகுங்கோள் ! இறை மகனே ! நிலங்கள் மேன்மேலும் வந்து கூடும்படி நல்லிலக்கணம் கிடந்த நின்னுடைய சக்கரரேகையையுடைய அழகுடைய பெரிய கைகள் வெற்றி தோற்றுவிக்கும் செயலையுடையனவாக ! என்று பலகாலும் பொய்யாத நற் சொற்களை மெய்ம்மையோடு கூறி அவ்விரு வேந்தரும் ஒருவரொருவருடைய மார்பின்கட் பொருந்துமாறு ஆர்வத்துடன் தழுவிக்கொண்டு பிரிந்து போகத் தொடங்கிய பொழுது தருசக மன்னனுக்கு உதயணன் கூறுவான்; என்க.
 
(விளக்கம்) கேண்மையுடையோராகிய சேணில மன்னர் என்க. அவர்களும் துணையாக வருவர் என்க. செறியச் செய்த குறியினிர் ஆமின் - நீயும் அமைச்சரும் பிறருக்குத் தெரியாதபடி செய்து கொண்ட சங்கேதத்தையுடையீராக ஆமின். நிலம்பட - நிலங்கள் மேன்மேலும் கூடும்படி. நேமி - சக்கரரேகை. ''சங்க லேகையும் சக்கர லேகையும், அங்கை யுள்ளன வையற்கு'' (சூளா. குமார. 45). வலம்படுவினைய - வெற்றியுண்டாகும் செயலையுடையன. வாய்ப்புள் - நற்சொல். அகலம் - மார்பு. இருவரும் : உதயணனும் தருசகனும். உதயணன் தருசகற்குரைக்கும் என்க.