பக்கம் எண் :

பக்கம் எண்:441

உரை
 
3. மகத காண்டம்
 
24. மேல்வீழ் வலித்தது
 
           இருமண மெய்திய வின்ப மெல்லாம்
           உருமண் ணுவாவினை யுற்றதற் பின்னை
           ஐம்முந் நாளி னவனைச் சிறைவிடுத்
     30    தெம்முன் னாகத் தருதனின் கடனென
           அமைச்சன் பெருமையு மரசன தார்வமும்
           மனத்தி னுவந்து மகதவர் கோமான்
           அதுவொருப் பட்டாங் ககன்ற பின்னர்
 
           (உதயணன் தருசகன் பாற் கூறுதல்)
            27 - 33 : இருமணம் ......... பின்னர்
 
(பொழிப்புரை) ''மைத்துன! யான் பதுமாபதியின் பெரிய மண வாயிலாய் அடைந்த இன்பமெல்லாம் என் அமைச்சனாகிய உருமண்ணுவாவைப் பகைவர் கையினின்றும் மீட்டுக் கொண்ட பின்னரே
உண்மையான இன்பம் ஆகும்; ஆதலின் இன்னும் பதினைந்து நாள்களினுள்ளே அவ்வமைச்சனைச் சிறை வீடு செய்து என் முன்னிலையிலே கொணர்ந்து விடுதல் நினது பெருங்கடமை யாகும்'' என்று கூறா நிற்ப; அது கேட்ட தருசக மன்னன் உருமண்ணுவாவினது பெருமையினையும் அவன்பால் உதயணன் கொண்டுள்ள அன்பினையும் அறிந்து தன் நெஞ்சத்தின்கண் பெரிதும் மகிழ்ந்து, ''அங்ஙனமே செய்வே'' னென்று அச்செயலுக்கு உடன்பட்டுக் கூறி நீங்கிய பின்னர் ; என்க.
 
(விளக்கம்) இருமணம் - பெரிய மணம். உருமண்ணுவா சிறைப்பட்டிருக்கும் பொழுது யான் எய்தும் இன்பமெல்லாம் இன்பமாக மாட்டா என்று உணர்த்திய படியாம். ஐம்முந்நாள் - பதினைந்து நாள். அவனை : உருமண்ணுவாவை. அமைச்சன் : உருமண்ணுவா. புரந்தான் கண்ணீர் மல்குதலின் அவ்வமைச்சன் பெருமை தருசகனுக்குப் புலனாயிற்று என்க. அரசன் : உதயணன். கோமான் : தருசகன். அது - அவ்வேண்டுகோளை.