பக்கம் எண் :

பக்கம் எண்:442

உரை
 
3. மகத காண்டம்
 
24. மேல்வீழ் வலித்தது
 
           உதயண குமர னுரிமை தழீஇ
     35    அடற்பே ரியானையு மலங்குமயிர்ப் புரவியும்
           படைக்கூழ்ப் பண்டியும் பள்ளி வையமும்
           நடைத்தே ரொழுக்கு நற்கோட் டூர்தியும்
           இடைப்படப் பிறவு மியைந்தகம் பெய்து
           கொடிப்படை போக்கிப் படிப்படை நிறீஇப்
     40    புடைப்படை புணர்த்துப் புள்ளிற் போகி
 
                   உதயணன் செயல்
              34 - 40 : உதயணன் ......... போகி
 
(பொழிப்புரை) உதயணகுமரன் தன் பரிவாரங்கள் சூழும்படி வெற்றியுடைய பெரிய யானைப்படைகளும் அசைகின்ற பிடரிமயிரையுடைய குதிரைப்படைகளும், படைகளுக்கு வேண்டிய உணவுப் பொருள் ஏற்றிய வண்டிகளும், படை மறவர் உறங்குதற்குரிய வண்டிகளும், இயங்கா நின்ற தேர் நிரலும், நல்ல மருப்புடைய ஊர்தியாகிய யானைகளும் பிறவும் ஆகிய இவற்றை இடையிடையே நிறுத்தப்பட்ட கொடிப் படையை முற்படச் செலுத்திக் கூலிப் படையைப் பின்னர் நிறுத்திச் சுற்றுப்படைகளைப் பக்கங்களிலே சேர்த்துப் பறவைகளைப் போல விரைந்து செல்லாநிற்ப ; என்க.
 
(விளக்கம்) உரிமை-பரிவாரம். படைக் கூழ்-படைக்கு வேண்டிய உணவு. பண்டி - வண்டி. பள்ளிவையம் - உறங்குதற்குரிய வண்டி. நிலைத்தேரு முண்மையின் நடைத்தேர் என்றார். கொடிப்படை - முன் படை. படிப்படை - கூலிப்படை. புடைப்படை - சுற்றுப்படை. பறவை போல விரைந்து சென்று என்க.