பக்கம் எண் :

பக்கம் எண்:443

உரை
 
3. மகத காண்டம்
 
24. மேல்வீழ் வலித்தது
 
           மள்ளரொடு புணர்ந்த மாண்பிற் றாகிக்
           கள்ளரொடு புணர்ந்த கட்டரண் குறுகிப்
           போர்மேற் கொண்ட புகற்சியன் புரவலன்
           ஆர்மேற் போங்கொ லஞ்சுதக வுடைத்தெனச்
     45    சேனை மன்னர் சிந்தையுட் டேம்ப
           வலிப்பது தெரிய வொலித்துடன் குழீஇ
           விட்டன னிருந்த காலை யொட்டிய
 
                     (இதுவுமது)
             41 -47 : மள்ளர் ......... காலை
 
(பொழிப்புரை) இங்ஙனமாக எழுந்து சென்ற படை மறவர்களோடு கூடிய மாண்புடையதாய் ஆறலை கள்வரோடு கூடிய காவலையுடைய அரண்களை எய்தி அவ்வரண்களிலுள்ள படைகளையுடைய மன்னர்கள், ''இவ்வத்தவ வேந்தன் இப்பொழுது போரை மேற்கொள்ளுதற்குக் காரணமான விருப்பத்தையுடையவனாய் இங்ஙனம் படை கூட்டிச் செல்கின்றான்; இவன் எவ்வரசன் மேலே செல்வனோ? இந்நிகழ்ச்சி நம்மால் பெரிதும் அஞ்சத் தகுந்த தொன்றாக இருக்கின்றது'' என்று தம் நெஞ்சினுள்ளே தேம்பாநிற்பவும், தான் துணிந்த செயலைப் பிற மன்னர் தெளிந்து கொள்ளும்படியும் தன்படையுடன் ஆரவாரித்து ஓரிடத்தே கூடி அம்மன்னன் தங்கியிருந்தபொழுது, என்க.
 
(விளக்கம்) மள்ளர் - மறவர். கள்ளர்-ஆறலைக் கள்வர். கட்டரண் - காவலையுடைய அரண். புகற்சியன் - விருப்பமுடையன். புரவலன்; உதயணன். சேனைமன்னர் என்றது அங்குள்ள குறுநில மன்னரை. விட்டனன் - படையைத் தங்கவிட்டு.