பக்கம் எண் :

பக்கம் எண்:449

உரை
 
3. மகத காண்டம்
 
24. மேல்வீழ் வலித்தது
 
         
     80     தப்பினா ரென்ற தம்பியர் வந்தவன்
           பொற்கழற் சேவடி பொருந்தப் புல்லி
           ஓர்த்தனந் தேறி யுறுதிநோக் காது
           சேர்த்தியில் செய்கையொடு சிறைகொளப் பட்டுப்
           பெருங்குடி யாக்கம் பீடற வெருளி
     85    அருங்கடம் பூண்ட வவியாக் காதலொடு
           பயந்தினி தெடுத்த படைப்பருங் கற்பினம்
           கொற்ற விறைவிக்குக் குற்றேல் பிழையா
           தொருங்கியா முறைத லொழிந்தது மன்றி
 
        தம்பியர் உதயணனை இறைஞ்சிப் புலம்பிக் கூறுதல்
                80 - 88 : தப்பினார்..........அன்றி
 
(பொழிப்புரை) ஆருணிமன்னனின் வஞ்சகச் செயலினின்றும் ஒருவாறு உய்ந்து பிழைத்தார் என்று கூறப்பட்ட தம்பியராகிய பிங்கல கடகர் இருவரும் உதயணன் திருமுன்வந்து அவன் அடிகளிலே வீழ்ந்து அழகிய வீரக் கழலணிந்த அச்சேவடிகளைக் கைகளாற் பற்றிக் கொண்டு ''பெருமானே! ஆராய்ந்து தெளிந்து எமக்கு உறுதியாவனவற்றை உணராமலும் துணையாவாரோடு சேர்ந்து வாழாமலும் பகைவனாற் சிறைகொளப்பட்டு நம்முடைய பெரிய மன்னர் குடிக்குரிய ஆக்கமும் பெருமையும் அழிந்துபோம்படி அஞ்சி மேற்கோடற்கரிய கற்புக்கடம் பூண்ட கெடாத காதலையுடையாரும் நம்மை ஈன்று இனிதே வளர்த்தவரும் பிறராற் படைத்தற்கரிய கற்பினையுடையவரும் ஆகிய வெற்றிமிக்க நம் அன்னையாகிய கோப்பெருந்தேவியாருக்கு யாங்கள் குற்றேவல் செய்தலிற் றவறாமல் அப்பெருமாட்டியாரோடு ஓரிடத்தே உறைதலையும் ஒழிந்ததல்லாமலும் என்க;
 
(விளக்கம்) தப்பினார் - உய்ந்தார். தம்பியர் - பிங்கலகடகர். அவன் : உதயணன். ஓர்ந்தனம் - ஆராய்ந்து. சேர்த்தியில் செய்கை- கூட்டுறவில்லாத தொழில். வெருளி - அஞ்சி. இறைவி - தாய். குற்றேல் - குற்றேவல்.