பக்கம் எண் :

பக்கம் எண்:45

உரை
 
3. மகத காண்டம்
 
3. இராசகிரியம் புக்க
 
         
           சுடுகதி ரணிந்த சூழ்கதிர்ச் செல்வன்
           விடுசுடர்ப் பேரொளி விமானம் போலச்
     100    சேணொளி திகழு மாண்வினை மாடம்
           வேண்டிய மருங்கிற் காண்டக நெருங்கிச்
           செஞ்சுடர் மணிமுடி திகழுஞ் சென்னிப்
           பைந்தலை நாகர் பவணங் கடுப்பக்
           காப்பின் றாயினுங் கண்டோ ருட்கும்
     105   யாப்புடைப் புரிசை யணிபெற வளைஇ
          அருமணிப் பைம்பூ ணரசகத் தடைந்து
          வாயி லணிந்த வான்கெழு முற்றத்துக்
          கோயில் கொட்டை யாகத் தாமரைப்
 
           (அரண்மனை)
     98 - 108 : சுடுகதிர்............கொட்டையாக
 
(பொழிப்புரை) சுடாநின்ற ஒளிக்கற்றைகளை அணிந்த
  உலகத்தைச் சூழ்ந்து வருகின்ற கதிர்ச் செல்வனாகிய ஞாயிற்றுத்
  தேவன் ஊர்ந்து வருகின்ற ஒளிவீசும் பெரிய சுடர்களையுடைய
  விமானத்தைப் போன்று நெடுந்தொலைவினும் ஒளிவீசித் திகழாநின்ற
  மாட்சிமையுடைய தொழிற் சிறப்பமைந்த மாடமாளிகைகள்
  அமையவேண்டிய இடந்தொறும் காண்டற்கினியனவாக
  நெருங்கப்பட்டுச் செவ்விய ஒளி மணியையுடைய முடிவிளங்கா
  நின்ற உணர்ச்சியினையுடைய பசிய தலையினையுடைய நாக
  ருடைய உலகமாகிய பவணவுலகினைப் போன்று பகையின்மையாலே
  பாதுகாவல் இல்லையாயினுங் கண்டோர் அஞ்சுதற்குக் காரணமான
  தொடர்புடைய மதில்களாலே அழகுண்டான் சூழப்பட்டுப்
  பெறற்கரியமணிகள் பதித்தபசிய பொன்னணிகலன் பூண்ட மன்னன்
  தன்னகத்தே வீற்றிருக்கப்பட்டு வானத்தைத் தீண்டும் மாடவாயில்
  அழகு செய்யப்பட்ட முன்றிலையும் உடைய அரண்மனை
  நடுவணிருக்கும் பொகுட்டாகவும் என்க.
 
(விளக்கம்) கதிர்ச் செல்வன்-ஞாயிறு, ஞாயிற்றின்
  விமானம் என்க. விமானம் அரண்மனையகத்துள்ள மாடமாளிகைகட்குவமை.
  வேண்டிய மருங்கு - அமைய வேண்டிய இடம். நெருங்கி- நெருங்கப்பட்டு
  பவணம் - நாகருலகம், பகையின்மையாற் காப்பின்றாயினும் என்க,
  அரசு - அரசன். கோயில் - அரண்மனை. கொட்டை பொகுட்டு.