உரை |
|
3. மகத காண்டம் |
|
24. மேல்வீழ் வலித்தது |
|
இருங்கடல் வரைப்பி னினியோ
ரெடுத்த 90 இறைமீக் கூறிய
விராமன் றம்பி
மறுவொடு பெயரிய மதலைக்
கியைந்த
ஆனாப் பெரும்புகழ் யாமு
மெய்தத்
தேனார் தாமரைத் திருந்துமலர்ச்
சேவடி வழிபா
டாற்றலும் வன்கணி னீத்தனெம்
|
|
(இதுவுமது)
89 - 94 : இருங்கடல்.........நீத்தனெம் |
|
(பொழிப்புரை) அண்ணலே! பெரிய கடல் சூழ்ந்த நிலவுலகின்கண்
சான்றோர் புகழ்ந்து கூறிய வேந்தருள் மிக்கோனாகிய இராமனுடைய தம்பியாகிய
இலக்குமணனுக்குப் பொருந்திய குறையாத பெரிய புகழை யாமும் எய்தும்படி தேன் நிரம்பிய
செந்தாமரை மலர் போலும் திருந்திய சிவந்த நின்னுடைய அடிகளுக்கு வழிபாடு செய்து
நின்னோடு உறைதலையும் எம்முடைய அன்பிலாமையாலே இழந்தேம்;
என்க. |
|
(விளக்கம்) இனியோர் - சான்றோர். எடுத்த - உயர்த்துக் கூறிய.
இறைமீக்கூறிய - அரசரில் மேலாகக் கூறப்பட்ட. மறுவொடு பெயரிய மதலை : இலக்குமணன். மறு
- சக்கரரேகை. சைன நூலான வடமொழி உத்தரபுராணத்தில் இராமாயண சரித்தரம் வருமிடத்து
இராமன் தம்பி சக்கரரேகையென்ற அடையாளத்துடன் கூடியவனாதலால் லட்சுமணன் என்ற
பெயருடையவனானான் என்று கூறப்பட்டுள்ளதென்பர். ஆனாப்பெரும் புகழ் - என்றும் குறையாத
பெரிய புகழ். இனி, தமையனை நீங்காமையால் உளதாகிய மிக்க கீர்த்தி என்பாரும் உளர்.
வன்கணின் - கண்ணோட்டமில்லாமையினாலே. |