உரை |
|
3. மகத காண்டம் |
|
24. மேல்வீழ் வலித்தது |
|
95 கழிபெருஞ்
சிறப்பிற் காவல் வேந்தே
இம்மை யென்ப தெமக்குநெறி
யின்மையின்
முன்னர்ப் பிறப்பின் மூத்தோர்ப்
பிழையா
துடன்வழிப் படூஉ முறுதவ
மில்லாக்
கடுவினை யாளரேம் யாமெனக்
கலங்கிப் 100 பொள்ளெனச்
சென்னி பூமி
தோய உள்ளழல்
வெம்பனி யுகுத்தரு கண்ணீர்த்
துன்பமொ டிறைஞ்சிய தம்பியர்த்
தழீஇ வழிபா
டாற்றலும் வன்கணி னீத்தனெம்
|
|
(இதுவுமது)
95 - 102 : கழி.........தழீஇ |
|
(பொழிப்புரை) மிகப்பெரிய சிறப்பினையுடைய எங்கள் காவலனாகிய
வேந்தே! இப்பிறப்பின்கண் எமக்கு வாழ்க்கை நெறி நன்கு அமையாமையின் யாம்
முற்பிறப்பின்கண் எமது ஐம்பெருங்குரவரையும் பிழையின்றி வழிபட்டு அவருடன் உறைதற்குக்
காரணமான மிக்க தவம் சிறிதும் இல்லாமல் தீவினையே செய்துளேம் போலும், என்று கூறி
நெஞ்சு கலங்கிப் பொள்ளெனத் தந்தலை நிலத்தில் தோய நெஞ்சின்கண் அழலாநின்ற
துன்பத்தீயால் வெப்பமுடைய கண்ணீரை யுகுக்கின்ற துன்பத்தோடு தன்னை வணங்கிய
அத்தம்பிமாரை உதயணன் கைகளாற் றழுவி எடுத்துக் கொண்டு;
என்க.
|
|
(விளக்கம்) நெறியின்மையின் - நன்னெறி வாயாமையின் என்க.
மூத்தோர் - ஐம்பெருங்குரவர். உறுதவம் - மிக்க தவம். கடுவினை - தீவினை. பொள்ளென:
விரைவுக்குறிப்பு. இறைஞ்சிய - வணங்கிய. உதயணன் தழீஇ
என்க. |