பக்கம் எண் :

பக்கம் எண்:454

உரை
 
3. மகத காண்டம்
 
24. மேல்வீழ் வலித்தது
 
           முடிந்த திந்நிலை முடிந்தன ரவரெனச்
           செப்பிய மாற்றம் பொய்ப்ப தன்றாற்
           பொரக்குறை யிலமென விரப்ப வின்புற்
     120    றிளையோர் தம்மோ டீன்றவட் கிரங்கிக்
           களைக ணாகிய காதலந் தோழனை
           வளையெரிப் பட்ட தெளிபே ரன்பிற்
           றளையவிழ் கோதையொடு தருதலும் பொருளோ
           நும்மைத் தந்தென் புன்மை நீக்கிய
     125    உம்மைச் செய்த செம்மைத் தவத்தனெனத்
           தம்பியர் தாமரைத் தடங்கண் சொரியும்
           வெம்பனி துடைத்துப் பண்புளி பேணிக்
           கண்ணுற வெய்திய கருமம் போல
           மண்ணுறு செல்வ நண்ணு நமக்கென
 
                      (இதுவுமது)
             117 - 129: முடிந்தனர்.........நமக்கென
 
(பொழிப்புரை) அது கேட்ட அத்தம்பிமார், ''பெருமானே! நீ கூறியமொழி இனிப் பொய்ப்பதன்று. அப்பகைவரோடு போராற்றுதற்கு வேண்டுவனவெல்லாம் யாம் இப்பொழுது உடையேம். குறையொன்றுமிலேம்'' என்று கூறாநிற்ப, அது கேட்டலும் அவ்வுதயணமன்னன், உடன் பிறப்பன்பு தன்னெஞ்சத்தைக் கவர் தலாலே இன்புற்று அத்தம்பிமாரோடு தம்மை ஈன்ற தாய்க்கு மனமிரங்கிப் பின்னர்த் தனக்குப் புகலிடமாகிய அன்பிற்குரிய தோழனாகிய யூகியையும், தன்னை வளைத்துக் கொண்ட தீயின்கண் இறந்துபட்ட தெளிந்த பேரன்பினையுடைய கட்டவிழ்ந்த மலர் மாலையினையுடைய வாசவதத்தையையும், மீட்டும் கொணர்ந்து தருதலும் நுங்களை இங்ஙனம் கொணர்ந்து தந்து என்னுடைய துன்பத்தைப் போக்கிய முற்பிறப்பில் யான் செய்த செவ்விய தவத்திற்கு ஒரு பொருளோ? யான் அத்தவமுடையேன் அல்லெனோ என்றுக் கூறித் தம்பிமாருடைய தாமரைமலர் போன்ற பெரிய கண்கள் சொரியாநின்ற வெவ்விய கண்ணீர்த்துளிகளைத் துடைத்துப் பண்போடு அவர்களைப் பேணி ''நம்பியீர்! நாம் ஒருவரை யொருவர் காண்டற்கு உண்டான ஆகூழ் போலவே இனி யாம் நம் நாட்டை எய்தும் செல்வமும் நமக்குத் தானேவரும்'' என்று கூறி; என்க.
 
(விளக்கம்) செப்பிய............இலமென இம்மொழிகள் தம்பிமாருடைய மொழிகள். செப்பிய மாற்றம் என்றது உதயணன் அவர் முடிந்தனர் என்று கூறியதனை. விரப்ப என்றும் பாடம்; ஈர்ப்ப என்றும் பாடம். இப்பாடமே ஈண்டுக் கொள்ளப்பட்டது. தோழனை: யூகியை. கோதை : வாசவதத்தை. நும்மைக் கொணர்ந்து தருதற்குரிய தவத்தையுடையேன். அத்தவமே தோழனையும் கோதையையும் இனிக் கொணர்ந்து தருதல் ஒருதலை என்பது கருத்து.