பக்கம் எண் :

பக்கம் எண்:456

உரை
 
3. மகத காண்டம்
 
24. மேல்வீழ் வலித்தது
 
         
     135    வருட காரன் வணங்கினன் கூறும்
            இருளிடை மருங்கின் விரைவன ரோடி
            அற்ற மிதுவென வொற்றர் காட்டிய
            நீணிலை நெடுமதி லேணி சாத்தி
            உள்ளகம் புக்கு நள்ளிரு ணடுநாள்
     140    முதுநீர்ப் பௌவங் கதுமெனக் கலங்கக்
            கால்வீழ் வதுபோன் மேல்வீழ் மாத்திரம்
            விள்ளாப் படையொடு வேறுநீ யிருப்பக்
            கொள்ளா வேந்தனைக் கோயிலொடு முற்றிச்
 
                 (வருடகாரன் கூற்று)
           135 - 143 : வருடகாரன்.........முற்றி
 
(பொழிப்புரை) அது கேட்ட  வருடகாரன் உதயணனைக் கைகூப்பி வணங்கிக் கூறுவான், ''வேந்தே! இருளினூடே விரைந்து சென்று நம்மொற்றர்கள் ஒற்றிவந்து அவ்வரண்மனையின் நீண்ட நிலையினையுடைய நெடிய மதிலின்கண் சிதைந்த இடம் இதுவென நம்மொற்றர் நமக்குக் காட்டிய மதிலின்கண் நள்ளிருளுடைய நள்ளிரவிலே ஏணியைச் சார்த்தி நம் படைஞர் அவ்வரண்மனைக்குள்ளே புகுந்து பழைய நீரையுடைய கடல் ஞெரேலென்று கலங்குமாறு மழைக்கால் வீழ்வதுபோல நம்படைகள் அப்பகைவர்மேல் வீழ்ந்து அழிக்குமளவும், நீ நின்னுடைய நீங்காத பெரும் படையோடு தனித்து இராநிற்ப, யாங்கள் நம்
பகைவேந்தனை அரண்மனையினுள் வைத்து நாற்புறமும் சூழ்ந்து கொண்டு;'' என்க.
 
(விளக்கம்) விரைவனரோடி - விரைந்தோடி. அற்றம் - சிதைவிடம். நள்ளிருளையுடைய நடுநாள் என்க. நடுநாள் - நள்ளிரவு. முதுநீர்ப் பௌவம் - பழைய நீரையுடைய கடல். கதுமென : குறிப்பு மொழி. மழைக்கால் வீழ்வதுபோல் என்க. விள்ளாப்படை - விலகாத படை. கொள்ளாவேந்தன் - பகைவேந்தன். கோயில் - அரண்மனை. முற்றி - சூழ்ந்துகொண்டு.